×

டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலாகும்: கெஜ்ரிவால் எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் விரைவில் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்தார். டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது என்று தெரிவித்தது. இந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் ஒன்றிய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்திற்கு எதிராக கெஜ்ரிவால் நாடு முழுவதும் ஆதரவு திரட்டினார். மேலும் டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரமாண்டமான பேரணி நடத்தப்பட்டது.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் அந்தந்த தொகுதிகளில் இருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்றனர். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘அவசரச் சட்டம் மூலம் இன்று டெல்லியில் சர்வாதிகாரம் அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும். பிரதமர் மோடியால் நாட்டைக் கவனிக்க முடியாது, ஆனால் அவர் தினமும் எழுந்து டெல்லியில் நடக்கும் பணிகளை நிறுத்துகிறார்.

டெல்லியில் சர்வாதிகாரம் இருக்கும். மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம், ஆனால் ஒன்றிய அரசு டெல்லியை இயக்கும். நான் நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறேன், டெல்லி மக்கள் தனியாக இல்லை என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். 140 கோடி இந்திய மக்களும் அவர்களுடன் இருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை கைது செய்து டெல்லியில் வளர்ச்சி பணிகளை நிறுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் எங்களிடம் 100 சிசோடியாக்களும் 100 ஜெயின்களும் உள்ளனர். அவர்கள் நல்ல பணியைத் தொடருவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

நான்காம் வகுப்பு பாஸ் செய்த ராஜா
டெல்லி பேரணியில் கெஜ்ரிவால் கூறிய கதை:
ஒரு பெரிய நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஒரு ஏழை வீட்டில் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை ராஜாவாகப்போகிறது என்று ஜோதிடர் கணித்தார். ஆனால் தனது மோசமான குடும்ப சூழ்நிலையில் இது எப்படி சாத்தியமாகும் என்று குழந்தையின் தாய் ஜோதிடரை நம்பவில்லை. ஆனால் ஜோதிடர் அவரது மகனின் நட்சத்திரங்கள் அவர் ராஜாவாக வருவதைக் காட்டுவதாக உறுதியளித்தார். குழந்தைக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. 4 ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்குப்போகவில்லை. அவர் தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக ஒரு ரயில் நிலையத்தில் தேநீர் விற்கத் தொடங்கினார். ஆனால் அவர் கூட்டத்தை ஈர்க்கக்கூடிய வகையில் பேசுவதில் திறமை கொண்டு இருந்தார். இதனால் ஜோதிடர் கணித்தது போலவே, அவர் பெரிய தேசத்தின் ராஜாவாக மாறினார். அவர் நாடு முழுவதும் நான்காம் வகுப்பு பாஸ் செய்த ராஜா என்று அழைக்கப்படுகிறார்.

அவருக்கு எதுவும் தெரியாததால் அதிகாரிகளால் ஆவணங்களில் கையெழுத்திட வைக்கப்பட்டார். அவர் படிக்காதவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று நினைத்ததால் அவர்களிடம் கேள்விகளைக் கேட்க அவர் வெட்கப்பட்டார். ராஜாவின் ஆட்சியில், அட்டூழியங்கள் நடந்தன. மெதுவாக மக்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கினர். அவருக்கு எதிராக பேசுபவர்கள் சிறை கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்படுவார்கள் என்று ராஜா கூறினார். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு நாடு முழுவதும் தலைவிரித்தாடியது. தேவர்கள் இதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை செய்த பின்னர் சிவபெருமானிடம் உதவி கேட்கச் சென்றனர். சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்தார். நாட்டில் விசித்திரமான சம்பவங்கள் நடந்தன. ரயில் விபத்து நடந்து 250 க்கும் மேல் பலியானார்கள். மக்கள் இது ஒரு கெட்ட சகுனம் என்று கூறினர்.

ஒரு நாள் பலத்த மழை பெய்ததது. அப்போது மேலிருந்து ஒரு குரல் ஆணவ மன்னனுக்கு எதிராகக் குரல் எழுப்பும்படி மக்களைக் கேட்டுக்ெகாண்டது. மேலும் கடவுள் துணை அவர்களுடன் இருப்பதாகவும் ெதரிவித்தது. மக்கள் விழித்துக்கொண்டு அந்த மன்னனை ஓராண்டுக்குள் தூக்கி எறிந்தனர். மன்னன் வெளியேறிய பிறகு நாடு வேகமாக முன்னேறத் தொடங்கியது. இந்தக் கதையின் முக்கியத்துவம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கூறுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இந்தக் கதையை நீங்கள் பரப்பினால், சமூகமும், தேசமும் முன்னேறும்’ என்று கெஜ்ரிவால் கூறினார்.

The post டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலாகும்: கெஜ்ரிவால் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Kejriwal ,New Delhi ,
× RELATED கெஜ்ரிவால் முதல்வராகும் வரையில்...