×

இறந்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கும் முன்பு கள ஆய்வில் உறுதி செய்ய அறிவுரை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்குவதற்கு முன்பு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுறுத்தி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் – 2024 தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று ஊட்டியில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார்.

இதில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் மற்றும் நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சங்கர் தலைமை வகித்து பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 1.1.2024ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம்-2024 ஆனது கடந்த மாதம் 27ம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. 1.01.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் ேசர்க்க வாக்குசாவடிகளில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கடந்த 4,5ம் தேதிகளில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தற்போது 2 நாள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

எனவே அனைத்து பொதுமக்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள், முகவரி மாற்றம் மேற்கொள்ளவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். வாக்காளர் பெயர் பட்டியலிருந்து இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்குவதற்கு முன்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். 100 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் குறித்த விவரங்களை வாக்குசாவடி நிலை அலுவலர்கள் பார்வையிட்ட உறுதி செய்ய வேண்டும்.

இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு அவர்களிடையே தேவையான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களை நீக்குவதற்கு முன்பாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும்.

அதேபோல அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்குச்சாவடி முகவர்களின் விவரங்களை இதுவரை அளிக்காதவர்கள் உடனடியாக அளிக்க வேண்டும். செம்மையான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டு தொடக்க பள்ளியில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து பெற்ற விண்ணப்ப படிவங்களை, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, ஆர்டிஓக்கள் முகமது குதுரதுல்லா, பூஷணகுமார், மகாராஜ், நகராட்சி ஆணையர் ஏகராஜ், தேர்தல் வட்டாட்சியர் காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இறந்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கும் முன்பு கள ஆய்வில் உறுதி செய்ய அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர்...