×

வெடிகுண்டு வீச்சு, வேட்பாளர் மீது தாக்குதல் மே. வங்கத்திலும் தேர்தல் முடிந்தது: கடைசி கட்டத்தில் 76.70% வாக்குப் பதிவு

கொல்கத்தா: வெடிகுண்டு வீச்சு, வேட்பாளர் மீது தாக்குதல், வன்முறையுடன் மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று முடிந்தது. மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து வந்தது. நேற்று 35 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 11,860 வாக்கு சாவடிகளில் நடந்து முடிந்தது. பெலியகட்டா பகுதியில் பாஜ-திரிணாமுல் தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. ஜொரசங்கோ தொகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது வாகனத்தை குறிபார்த்து வெடிகுண்டு வீசப்பட்டதாக பாஜ வேட்பாளர் மீனாதேவி புரோகித் குற்றம் சாட்டினார்.  இதேபோல் நானூர், மனிக்டலா பகுதியிலும் மோதல்கள் ஏற்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது.

முர்சிதாபாத்தில் கார் மீது மோதி ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர். திரிணாமுல் வேட்பாளரான ஜபிகுல் இஸ்லாமின் கார் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக சிபிஐ எம் குற்றம் சாட்டியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 6.30 மணி முடிவில் 76.70 சதவிகித வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இத்துடன் இம்மாநில தேர்தலும் முடிவுக்கு வந்தது. தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி தேர்தல்கள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இவற்றில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது.

Tags : Bengal , Bomb blast, attack on candidate May. Election ends in Bengal too: 76.70% turnout in last phase
× RELATED வங்கதேச எம்பி கொலை மே. வங்கத்தில் கால்வாயில் இருந்து மனித எலும்பு மீட்பு