×

தோல்வி என்று தெரிந்தும்…

2016 ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம்தேதி, கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி, அப்போது புழக்கத்தில் இருந்த ₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. இந்தியாவின் மொத்த பணசுழற்சியில் ₹500, ₹1000 நோட்டுகளே அதிகளவில் இருந்தன. இந்த நோட்டுக்களின் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 4 நாட்களில் புதிதாக ₹2ஆயிரம் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மதிப்பு ₹14 லட்சம் கோடி. அவற்றை புதிய ₹500, ₹1000 தாள்களாக மாற்ற வேண்டும் என்றால், அச்சிடுவதற்கே பல மாதங்கள் ஆகும். இதன்காரணமாகவே புதிதாக ₹2ஆயிரம் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுகிறது என்று அப்போது காரணமாக கூறப்பட்டது. வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் ₹2 ஆயிரத்திற்கான ேநாட்டுகளே இருந்தது. இதனை மாற்றுவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக பொதுமக்கள் சில்லரை மாற்றுவதற்கும், வியாபாரிகள் சில்லரை கொடுப்பதற்கும் படாத பாடுபட்டனர்.

பொருளாதார மேம்பாடு, கருப்பு பணம் ஒழிப்பு என்று பல்வேறு காரணங்களை கூறி, புழக்கத்தில் விட்டாலும் இதன் ஆயுள் அதிக நாட்கள் நீடிக்காது என்று, அப்போதே எளிய மக்கள் பேச ஆரம்பித்தனர். இப்படி எளிய, நடுத்தர மக்களை சிரமத்தில் ஆழ்த்திய ₹2ஆயிரம் நோட்டுகள், பெரும் செல்வந்தர்களுக்கு சேமித்து வைக்க எளிதாக இருந்தது என்பதும் உண்மை. தேர்தல் களங்களிலும், அதிகாரிகளின் சோதனையின் போதும் இந்த நோட்டுகளே அதிகம் பறிமுதலானது. இப்படி ஆறரை ஆண்டுகள் உயிரோட்டத்துடன் இருந்த ₹2ஆயிரம் நோட்டுக்களை, தற்போது திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. வரும் செப்டம்பர் மாதம் 30ம்தேதிக்குள் இருப்பில் உள்ள ₹2ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்ட 2016-17ம் நிதியாண்டில், ₹354.27 லட்சம் கோடிக்கான ₹2ஆயிரம் நோட்டுக்கள் அச்சிடப்பட்டன. ஆனால் 2017-18ம் நிதியாண்டில் இது 11 லட்சம் கோடியாகவும், 2018-19ம் நிதியாண்டில் 4 லட்சம் கோடியாகவும் எண்ணிக்கை குறைந்தது. அதே நேரத்தில், 2019ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக ₹2ஆயிரத்திற்கான நோட்டுக்கள் அச்சடிக்கப்படவில்லை என்ற தகவலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 3.62 லட்சம் கோடி நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளது. இந்த வகையில் ₹2ஆயிரம் நோட்டுக்கான தேவை, பயனற்றது என்பது அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த ஆண்டிலேயே உறுதியாகி உள்ளது. ஆனால், இந்த நோட்டுகள் திரும்ப பெறப்படுமா? என்ற கேள்விக்கு ஒவ்வொரு முறையும் ஒன்றிய அமைச்சர்கள் அளித்த பதில் மழுப்பலாகவே இருந்தது. எந்த நிலையிலும் ₹2ஆயிரத்திற்கான நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டமாட்டாது என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது.

இதன்படி, ஒரு திட்டத்தின் தோல்வி என்பது முதல் துவக்கத்திலேயே தெரிந்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது ஒன்றிய அரசு. இதை துவக்கத்திலேயே எதிர்த்த எதிர்கட்சிகளின் குரலும் அவர்கள் காதில் விழவில்லை. பொருளாதாரம் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் போது, மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்பதில்லை. இதன் காரணமாக 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு ேநரத்தில் மக்கள்பட்ட துன்பங்கள் சொல்லி மாளாதவை. வங்கி வாசலில் காத்திருந்த பலர், மயங்கி விழுந்து இறந்த சம்பவங்களும் நிகழ்ந்தது. அதுபோன்றதொரு சூழலை இந்த அறிவிப்பும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதே மக்கள் மன்றத்தின் குரலாக உள்ளது.

The post தோல்வி என்று தெரிந்தும்… appeared first on Dinakaran.

Tags : 8Md ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்...