×

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் எப்போது? திங்கட்கிழமை அறிவிப்பு வெளியாகும்: மாநிலங்களவையில் துணைஜனாதிபதி- திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மோதல்

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நடத்துவது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கியது. அன்று முதல் மணிப்பூர் பிரச்னையால் தொடர் அமளி நிலவுகிறது. பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டது குறித்து பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்க கேட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் பிரதமர் மோடி அவைக்கே வரவில்லை. இதையடுத்து அவரை மணிப்பூர் பிரச்னை பற்றி பேச வைப்பதற்காக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

இதை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்டார். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் எப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்து 10 நாட்களுக்குள் விவாதம் நடைபெற வேண்டும். எனவே விவாதம் நடைபெறும் தேதியை அறிவிக்க கேட்டு நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை இருக்கைக்கு செல்லும்படி சபாநாயகர் கேட்டும், அமளி நீடித்தது. அப்போது பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்திரி,’ 1978ம் ஆண்டு மே 10ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் வழங்கியதும், உடனே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது’ என்றார்.

அதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி,’ சட்டவிதிகளின்படிதான் அனைத்தும் நடைபெறும். 10 நாட்களுக்குள் நிச்சயம் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்றார். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் இதை ஏற்றுக்கொள்ளததால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை தொடங்கிய போதும் அமளி நீடித்தது. அப்போது சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா, தேசிய செவிலியர் மற்றும் மருத்துவ ஆணைய மசோதா 2023 மற்றும் தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா 2023 ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்தும் தேதி திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி அவைக்கு வந்ததும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. மாநிலங்களவை: மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் செய்ய வலியுறுத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரிக் ஓ பிரையனுடன் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் பிரச்னை குறித்து குறுகிய அளவில் விவாதம் நடத்தலாம் என்று கூறி கேள்வி நேரத்தை முதலில் எடுத்தார்.

ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை எடுக்க சம்மதிக்கவில்லை. அப்போது,’கேள்வி நேரம் என்பது நாடாளுமன்ற பணிகளின் இதயம்’என்று தன்கர் கூறினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் எழுந்து,’ இது எங்களுக்குத் தெரியும். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து நாங்கள் முன்வைக்கும் பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதிகொடுக்க வேண்டும்’ என்றார். அதற்கு தன்கர்,’ இது உங்களுக்கும் தெரியும் என்று எனக்கும் தெரியும் சார். நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் காதுகளை கடனாக கொடுங்கள். ஒருமுறை உங்கள் காதுகளைக் கொடுத்தால், உங்களுக்கே புரியும்’ என்றார்.

அவர் கூறுகையில்,’அவையில் நாடகமாடுவது ஈடுபடுவது டெரிக் ஓ பிரையனின் பழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் நீங்கள் எழுந்து நிற்கும் போது, ​​அது உங்களின் தனிச்சிறப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் குறைந்தபட்ச விஷயம் அவைத்தலைவருக்காவது மரியாதை காட்ட வேண்டும் என்று அறிவுறுத்த விரும்புகிறேன். நான் ஏதாவது சொல்கிறேன் என்றால், நீங்கள் எழுந்து நாடகம் போடுகிறீர்கள்’ என்றார். தன்கர் தனது செயலை நாடகம் என்பதை டெரிக் ஓ பிரையன் கடுமையாக எதிர்த்தார். ‘எதிர்க்கட்சிகள் விரும்பும் விவாதத்திற்கு விதிமுறைகளின் அடிப்படையில் தான் நான் அழுத்தம் கொடுக்கிறேன்.

நான் விதிமுறைப்படி தான் நடக்கிறேன்’ என்று கூறிய அவர் தனது மேசையைத் தட்டினார். இது அவைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் கூறுகையில்,‘மேசையை தட்ட வேண்டாம். அதை தட்டாதீர்கள். இது ஒன்றும் தியேட்டர்கள் அல்ல. மன்னிக்கவும், இதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ என்றார். ஆனால் டெரிக் ஓ பிரையன் தொடர்ந்து பேச முயன்றதால்,’ இதை ஒரு போதும் ஏற்க முடியாது’ என்று கூறிய தங்கர், மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். மேலும் அனைத்து கட்சி தலைவர்களையும் தனது அறைக்கு வருமாறு அழைத்து விட்டு அவையில் இருந்து வெளியேறினார்.

* டெல்லி சேவைகள் மசோதா அடுத்த வாரம் தாக்கல்
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான சேவைகள் மசோதா அடுத்தவாரம் தாக்கல் செய்யப்படும் என்று சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்தார். இந்த சட்ட மசோதாவை எதிர்த்து மக்களவை செயலரிடம் காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி, திரிணாமுல் எம்பி சவுகத் ராய், திமுக எம்பி ஆ. ராசா மற்றும் என்கே பிரேமசந்திரன், தீன் குரியாகோஸ் ஆகியோர் நோட்டீஸ் கொடுத்து இருந்தனர். இந்த நோட்டீஸ் பற்றி பேசும் போது டெல்லி சேவைகள் மசோதா அடுத்தவாரம் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

* ஐஐஎம் திருத்தம் மசோதா தாக்கல்
மக்களவையில் அமளிக்கு இடையே இந்திய மேலாண்மை நிறுவனங்கள் சட்டம்(ஐஐஎம்) 2017 ஐ திருத்துவதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா அடுத்த வாரம் பரிசீலனைக்கு வந்து நிறைவேற்றப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்தார்.

* மோடி அரசுக்கு ஆதரவு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அறிவிப்பு
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவர் விஜயசாய் ரெட்டி கூறுகையில்,’நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது எப்படி நாட்டுக்கு உதவும்? மணிப்பூர் கலவரம் மற்றும் இரண்டு விரோதமான அண்டை நாடுகளின் குழப்பமான இந்த நேரத்தில் ஒன்றிய அரசை பலவீனப்படுத்த முயற்சிப்பது தேசிய நலன் சார்ந்ததாக இல்லை. ஒருவருக்கொருவர் எதிராக அல்லாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மோடி அரசுக்கு ஆதரவளித்து, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும். மேலும் டெல்லி சேவைகள் மசோதாவிலும் அரசுக்கு தான் ஆதரவாக வாக்களிக்கப்படும்’ என்றார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களும் உள்ளனர்.

The post நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் எப்போது? திங்கட்கிழமை அறிவிப்பு வெளியாகும்: மாநிலங்களவையில் துணைஜனாதிபதி- திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மோதல் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Vice President ,Trinamool ,Congress ,Rajya Sabha ,New Delhi ,Manipur ,Deputy President ,Trinamul ,Dinakaran ,
× RELATED விமான விபத்தில் மலாவி துணை அதிபர்...