×

அரபிக்கடலில் மிக தீவிரமானது பிப்பர்ஜாய் புயல் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: அரபிக்கடல் பகுதியில் நிலவிய மிக தீவிர புயல் பிப்பர்ஜாய் வடக்கு திசையில் நகர்ந்து நிலைகொண்டுள்ளது. அதே நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 6.30 மணி அளவில் நிலவிய மிக தீவிர புயல் “பிப்பர்ஜாய்” வடக்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை 8.30 மணி அளவில் கோவாவில் இருந்து மேற்கு-வடமேற்கே சுமார் 700 கி.மீ. தொலையில், மும்பையில் இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 620 கி.மீ. தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென் தென்மேற்கே சுமார் 600 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடகிழக்கு திசையிலும், பிறகு அடுத்த மூன்று தினங்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையிலும் நகரக்கூடும். மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 14ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டைடையில் 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

இன்று லட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இன்று முதல் 14ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அரபிக்கடல் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The post அரபிக்கடலில் மிக தீவிரமானது பிப்பர்ஜாய் புயல் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pipperjoy storm ,Arabic Sea ,Tamil Nadu ,Chennai ,Meteorological Inspection Centre ,Pipperjoy ,Arab Seas ,Pipperjoy Cymus ,Chennai Meteorological Research Centre ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...