கடலூர்: கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலையில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அருகே உள்ள தாழங்குடா மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி சாந்தி ஊராட்சி மன்ற தலைவராக உள்ள நிலையில், மதியழகனுக்கும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மாசிலாமணிக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் மாசிலாமணியின் மனைவியை தோற்கடித்து மதியழகனின் மனைவி வெற்றிபெற்றதில் இருவருக்கும் இடையேயான மோதல் அதிகமானதாக கூறப்படுகிறது.
இதில் கடந்த 2020ம் ஆண்டில் மாசிலாமணியின் தம்பி மதிவாணன் கொலை வழக்கில் மதியழகன் முதல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடலூர் சண்முகப்பிள்ளை தெருவில் சென்று கொண்டிருந்த மதியழகனை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் கொலையாளிகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலையில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 பேரை தனிப்படை போலீஸ் பிடித்தது. 5 இரண்டு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்ற 10 பேரை காவல்துறை மடக்கி பிடித்தது. 10 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் கொண்டு வரப்படுகின்றனர்.
The post கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலையில் 10 பேரை கைது செய்தது போலீஸ்..!! appeared first on Dinakaran.