×

காலை உணவு திட்டம் குறித்து விமர்சனம் உழைக்க ஓர் இனம் கொழுக்க ஓர் இனம்: முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி கண்டனம்

சென்னை: காலை உணவு திட்டம் குறித்து நாளிதழ் ஒன்றில் வெளிவந்த தலைப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தால் பயன்பெறும் பள்ளி மாணவர்களை விமர்சித்து நாளிதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டு இருந்தது. இது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: உழைக்க ஓர் இனம் உண்டு, கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் எல்லார்க்கும் எல்லாம் எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிட பேரியக்கம்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே என்பதை நொறுக்கி கல்விப் புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்கு சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியை போடுமானால் நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்.

திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள பதிவு: நம் வீட்டுப்பிள்ளைகள் பெறும் கல்வியின் வலிமை என்னவென்று அவர்களுக்கு தெரியும். சனாதனத்திற்கு எதிரான போரில் கல்வியே நமது ஆயுதம். அதை உணர்ந்திருக்கும் அற்பர் கூட்டம், பதட்டத்தில் தன் கீழ்த்தரத்தை வெளிக்காட்டுகிறது. நமக்கும் சனாதன ஒட்டுண்ணிகளுக்கும் இடையில் தொடரும் வரலாற்றுப்போருக்கு நம் ஆயுதத்தைக் கூர்தீட்டுவோம்.

The post காலை உணவு திட்டம் குறித்து விமர்சனம் உழைக்க ஓர் இனம் கொழுக்க ஓர் இனம்: முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Udayanidhi ,CHENNAI ,M.K.Stalin ,Sports Minister ,
× RELATED தன்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்: உதயநிதி