×

காலை 9 மணி என்பதை 7 மணியாக மாற்ற அரசிடம் முறையிடலாம் லியோ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி தர முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: லியோ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டுமெனவும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சியை தொடங்க அனுமதிக்க அரசு உத்தரவிடக்கோரி பட தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கீரின்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் நாத் தேவன் ஆஜராகினர். அரசு தரப்பில் மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, கடந்த முறை ஒரு படத்திற்கு அதிகாலை நான்கு மணி காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ள நிலையில் அதனை அரசு தான் கையாள வேண்டும். காலை ஒன்பது மணிக்கு காட்சிகளை தொடங்க வேண்டும் என்பது தான் அரசு வகுத்துள்ள விதி அதனை மீற முடியாது. லியோ படத்தின் நீளம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என்று தெரிந்திருந்தால் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம். இடைவெளி நேரத்தை குறைத்து கொண்டு ஐந்து காட்சிகள் திரையிட வாய்ப்புள்ளதா என்று திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இதையடுத்து நீதிபதி, லியோ படத்தின் நீளம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என தெரிந்திருந்தால் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம் என்று அரசு தரப்பு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தே ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை ஏழு மணி காட்சிக்கு கூட அனுமதியில்லை என்றால் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளுக்கு எதற்கு அனுமதியளிக்கிறீர்கள்? ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்ததால்தானே தற்போது அவர்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கிறார்கள்.

இடைவெளி நேரத்தை குறைத்துக்கொண்டு ஐந்து காட்சிகள் திரையிடுவதாக இருந்தால் பாதுகாப்பு அம்சங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது. 850 திரைகளில் படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கு எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும், அவர்களின் பணியையும் நினைத்து பார்க்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பிடம் தெரிவித்தார். இதையடுத்து, லியோ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட முடியாது. காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சி தொடங்குவதற்கு அனுமதி கோரி அரசிடம் மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த கோரிக்கை மனுவை திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து அதன் மீது மாலை நான்கு மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்ற அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

* 9 மணிக்குதான் படத்தை போடுவோம்

இந்த பிரச்னை தொடர்பாக தலைமை செயலகத்தில் சில அதிகாரிகளை சந்தித்து பேசிய பிறகு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சார்பில் வி.டி.எல்.சுப்பு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஏற்கனவே, முன்பதிவு தொடங்கி விட்டோம். இனி அதை மாற்ற முடியாது. அதனால் 9 மணி காட்சியே நடத்த முடிவு செய்துள்ளோம். 19ம் தேதி மட்டும் இன்னும் முன்பதிவு செய்யவில்லை. அன்றைய தினம் அரசு சொன்னதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம். அரசு கொடுத்த நேரத்தின்படி படத்தை ஓட்ட அனைத்தும் தயாராகி விட்டது, அதே தொடரும். 5 காட்சி போடப்போகிறோம். அது 7 மணிக்கு போட்டா என்ன, 9 மணிக்கு போட்டா என்ன? முன்பதிவு காலை 9 மணி என்று கொடுத்துள்ளோம். அதை மாற்றுவது சரியாக இருக்காது. பிரச்னை வரும். ஆனாலும் அரசு என்ன அனுமதி கொடுக்கிறதோ அதுபற்றி செய்வோம்.

* லியோ படம் தொடர்பாக அரசிடம் கோரிக்கை

சென்னை, தலைமை செயலகத்தில் வழக்கறிஞர் வேலு கார்த்திகேயன், உள்துறை செயலாளர் அமுதாவை சந்தித்து நேற்று மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் நடித்த லியோ படம் நாளை வெளியாகிறது. இப்படம் தினசரி 5 காட்சிகள் போட அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதற்கான நேரத்தை மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டோம். மாலை 4 மணிக்குள் நீதிமன்ற உத்தரவை உள்துறை செயலாளரிடம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அதுபற்றி அரசுக்கு நீதிமன்ற உத்தரவையும், எங்கள் கோரிக்கையையும் வழங்கியுள்ளோம். ஆலோசித்து அதுபற்றி பதில் அளிப்பதாக கூறியுள்ளார். ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடைவெளி ஒரு மணி நேரம் ஆகிவிடும். அதனால், 16 மணி நேரம் 30 நிமிடத்திற்குள் 5 காட்சி போட முடியாது. அதனால் காலை 9 மணி காட்சியை காலை 7 மணிக்கு அனுமதி அளிக்க கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

The post காலை 9 மணி என்பதை 7 மணியாக மாற்ற அரசிடம் முறையிடலாம் லியோ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி தர முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govt ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு...