×

நீதிமன்ற வளாகத்தில் ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி இன்ஸ்பெக்டர், எஸ்ஐயை அரிவாளால் வெட்டிய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு: கூட்டாளியுடன் கைது; ராமநாதபுரத்தில் பரபரப்பு

ராமநாதபுரம்: நீதிமன்ற வளாகத்தில் புகுந்து ரவுடியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்ததோடு, இன்ஸ்பெக்டர், எஸ்ஐயையும் வெட்டி விட்டு, தப்பியோடிய மற்றொரு ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ராமநாதபுரம், சிவஞானபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(28). ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பரோலில் வெளியில் வந்தவர், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி, கையெழுத்திட்டு வருகிறார். நேற்று காலை கையெழுத்து போடுவதற்காக நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை கிராமத்தை சேர்ந்த ரவுடி கொக்கிகுமார் (28), அவரது நண்பர் ரவுடி சண்முகநாதன் உள்ளிட்டோர் அசோக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வரவே இருவரும் தப்பியோடினர். படுகாயமடைந்த அசோக்குமாரை போலீசார் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொக்கி குமாரை, கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் விரட்டி சென்றனர்.

உச்சிப்புளி பகுதியில் பதுங்கி இருந்த அவரை, போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது கொக்கிகுமார், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் எஸ்ஐ தினேஷ்பாபு ஆகியோரின் கையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து போலீசார், துப்பாக்கியால் அவரது முழங்காலில் 2 முறை சுட்டனர். இதில் அவரது 2 கால்களிலும் காயம் ஏற்பட்டது. கீழே விழுந்த அவரை போலீசார் பிடித்து, கைது செய்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதே பகுதியில் பதுங்கியிருந்த கொக்கி குமாரின் கூட்டாளி சண்முகநாதனும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து எஸ்பி தங்கத்துரை கூறுகையில், ‘‘ரவுடி அசோக்குமாருக்கும், ஆர்.எஸ்.மடையை சேர்ந்த சந்துரு என்பவருக்கும், கடந்த மே 12ம் தேதி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்துருவின் நண்பர் ரவுடி கொக்கி குமார், அசோக்குமாரை பழி வாங்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில்தான் கொக்கிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் ராமநாதபுரம் எம்.எஸ்.கே நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவரை வெட்டியுள்ளனர். தொடர்ந்து கொத்த தெருவை சேர்ந்த சூர்யா என்பவரையும் வெட்டுவதற்கு, அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர், ஆனால் சூர்யா தப்பிவிட்டார். அதன் பின்னர் நீதிமன்றம் வந்து அசோக்குமாரை வெட்டியுள்ளனர். ரவுடி கொக்கி குமார் மீது கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன’’ என்றார்.

The post நீதிமன்ற வளாகத்தில் ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி இன்ஸ்பெக்டர், எஸ்ஐயை அரிவாளால் வெட்டிய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு: கூட்டாளியுடன் கைது; ராமநாதபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Roudi ,Rowdy ,Si ,Ramanathapura ,Ramanathapuram ,Roudy ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...