×

சரியான நடவடிக்கை

தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், கடலூர், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 9 மண்டல அலுவலகங்களும், 54 பதிவு மாவட்ட அலுவலகங்களும், 576 சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் சொத்துகளை வாங்குவது, விற்பது மற்றும் வில்லங்க சான்றிதழ், திருமண பதிவு சான்றிதழ் போன்ற பல்வேறு பணிகள் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் நடந்து வருகிறது.
தமிழ்நாடு அரசின் வருவாய்க்கு மிக முக்கியமான துறையாக பத்திரப்பதிவுத்துறை விளங்குகிறது.

ஒவ்வொரு நிதியாண்டிலும் அரசு நிர்ணயிக்கும் இலக்குகளையெல்லாம் சர்வ சாதாரணமாக எட்டக்கூடிய துறையாக உள்ளது. அதே நேரத்தில், இத்துறையில், சமீபகாலமாக இடைத்தரகர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. பொதுமக்கள் நேரடியாக சொத்துகளை விற்கவோ, வாங்கவோ எண்ணி, அதை பதிவுசெய்ய முயன்றால், இடைத்தரகர்கள் உள்ளே புகுந்து முறைகேடுகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. வருவாய் கொழிக்கும் இத்துறையில், சில நபர்களால் அரசுக்கு கோடிகளில் வருவாய் இழப்பும், கெட்டப்பெயரும் ஏற்படுகிறது.

பத்திரப்பதிவு, புதிய மனை மதிப்பு நிர்ணயம், அதிகாரிகள் இடமாற்றம் என பல வகைகளில் இடைத்தரகர்கள் நுழைவதால் புதிது புதிதாக முறைகேடுகள் முளைக்கிறது. இது, உயரதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேடுகளுக்கு மூலக்காரணம், இடைத்தரகர்கள் என்பது தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளது. இவர்களை அணுகினால், வேலை எளிதாக முடிந்துவிடும் என்கிற மனோபாவம் மக்களிடம் எழும் அளவுக்கு இவர்களது செயல்பாடுகள் உள்ளன. இடைத்தரகர்களை ஒழிக்கும் முயற்சியாக, தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சொத்து விற்பவர்கள், வாங்குபவர்களுக்கு மட்டுமே சார்பதிவாளர் அலுவலகங்களில் அனுமதி அளிக்கப்படும். மீறி இடைத்தரகர்கள் உள்ளே நுழைவது கண்டுபிடிக்கப்பட்டால், காவல்துறையினர் மூலம் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பதிவுத்துறையில் ஏதேனும் தவறு நடந்தால், சார்பதிவாளர் மட்டுமின்றி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும் தவறு உறுதிசெய்யப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைவாசம் பெற்றுத்தரப்படும் எனவும் இத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது, வெறும் எச்சரிக்கையாக மட்டும் இருக்காது, உடனடியாக அமலுக்கு வரும் என துறையின் உயரதிகாரிகள் வெளிப்படையாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது, பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியாக உள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் கலாச்சாரத்தை வேரறுத்தால், பதிவுத்துறை பணிகள் எளிதாகும், இங்கு வரும் மக்களும் மனநிம்மதி அடைவார்கள். பத்திரப்பதிவு தடையின்றி தொடரும். அரசு கஜானாவுக்கு சிந்தாமல், சிதறாமல் வரவு இருக்கும். தமிழ்நாடு அரசின் துல்லியமான இந்த நடவடிக்கை தொடரட்டும்.

The post சரியான நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Coimbatore ,Madurai ,Trichy ,Tirunelveli ,Salem ,Cuddalore ,Thanjavur ,Vellore ,Dinakaran ,
× RELATED கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்...