×

குன்னூர் அருகே பயங்கரம் 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பரிதாப பலி- 40 பேர் காயம்: தென்காசியில் இருந்து ஊட்டிக்கு சென்று திரும்பியபோது சோகம்

ஊட்டி: ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது தனியார் பஸ், குன்னூர் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த 52 பேர் நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பஸ் ஒன்றில் சுற்றுலா சென்றனர். ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களையும் சுற்றி பார்த்த பின், நேற்று மீண்டும் கடையம் செல்வதற்காக ஊட்டியில் இருந்து அதே பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர்.

நேற்று மாலை 6 மணி அளவில் குன்னூர் அருகே மரப்பாலம் பகுதியில் வந்த போது சுற்றுலா பஸ் அங்கிருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியோடு பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த பஸ்சுக்குள் இருந்து சுற்றுலா பயணிகளை மீட்க தொடங்கினர். இந்த விபத்தில் கடையம் பகுதியை சேர்ந்த விஜயசுப்பிரமணி மகன் நித்தின் (15), சண்முகய்யா மனைவி பேபி கலா (36), முருகேசன் (65), பாண்டராம் மனைவி முப்படாத்தி (67), ராமு மனைவி கவுசல்யா (29) உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

40க்கும் மேற்பட்டோர் பலத்த மற்றும் சிறு, சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் அந்த வழியாக பயணித்த வாகனங்களில் ஏற்றி குன்னூர் அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். நேற்று இரவு வரை மீட்பு பணிகள் தொடர்ந்ததால், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. ஊட்டி மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்திகிரி வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டது. விபத்து குறித்து குன்னூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* உதவி எண் அறிவிப்பு
குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் உதவிக்கு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. விபத்து தொடர்பான உதவிகள் வேண்டுவோர் 1077 மற்றும் 0423-2450034 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

* உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டத்திலிருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் நேற்று நீலகிரி மாவட்டம், குன்னூர், பர்லியாறு அருகே பேருந்தில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் முப்புடாதி(67), முருகேசன்(65), இளங்கோ(64),தேவிகலா(42), கௌசல்யா(29) மற்றும் நிதின்(15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

The post குன்னூர் அருகே பயங்கரம் 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பரிதாப பலி- 40 பேர் காயம்: தென்காசியில் இருந்து ஊட்டிக்கு சென்று திரும்பியபோது சோகம் appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Tenkasi ,Ooty ,
× RELATED குன்னூர் சாலையில் யானை முகாம்: அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்