×

ஒப்பந்த பணிக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் அதிமுக ஒன்றிய சேர்மன் சிக்கினார்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ஒப்பந்த பணிக்கு ரூ.3 லட்சத்து 9000 லஞ்சம் வாங்கிய அதிமுக ஒன்றிய சேர்மன் சிக்கினார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக ஜானகிராமன் உள்ளார். துணை சேர்மனாக தேமுதிகவை சேர்ந்த ஜான்சிராணி உள்ளார். இருவருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளது. மேலும் ஒப்பந்த பணிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் கோட்லாம்பாக்கம், கரும்பூர், சாத்திப்பட்டு, அவியனூர், கரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அந்த பணிகளுக்கு கமிஷன் தொகையை அதிமுக சேர்மனுக்கு வழங்க நேற்று ஒப்பந்ததாரர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது சேர்மன் தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் பணிகள் தருவதாக பேரம் பேசினார்.

அதன்படி, லஞ்ச பணத்தை அதிமுக சேர்மனுக்கு வழங்கினர். இது சம்பந்தமாக நேற்று கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்து அதிமுக சேர்மன் அறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலீசார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் சேர்மன் திணறினார். அவரது லாக்கரில் இருந்த லஞ்ச பணம் ரூ.3 லட்சத்து 9000ஐ பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சேர்மன், அலுவலர்கள், கடைநிலை ஊழியர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக சேர்மன் லஞ்சம் வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஒப்பந்த பணிக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் அதிமுக ஒன்றிய சேர்மன் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Panruti ,Cuddalore ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது