×

ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு : மனுதாரருக்கும் குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவருக்கும், குஜராத் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23ம் தேதி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஏப்ரல் 3ம் தேதி ராகுல் காந்தி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சூரத் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி ராகுல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து சூரத் கூடுதல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், தனக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரியும் ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் கடந்த 7ம் தேதி ராகுல் மனுவை தள்ளுபடி செய்தார். இந்தநிலையில் குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் ராகுல்காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வக்கீல் எஸ் பிரசன்னா சார்பில் இந்த அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி மேல் முறையீட்டு வழக்கில் குஜராத் அரசும் மனுதாரர் பர்னேஷ் மோடியும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்குவிசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

The post ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு : மனுதாரருக்கும் குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Supreme Court ,Government of Gujarat ,New Delhi ,Supreme Court of Gujarat ,PM Modi ,Gujarat government ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களின்...