×

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினர் வீட்டுக் காவலில் கைது: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினர் வீட்டுக் காவலில் கைது செய்யப்பட்டதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த முயன்ற, தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன்குமாரை காவல் துறையினர் நேற்று இரவு முதல் வீட்டை விட்டு வெளியே வர முடியாத வகையில் வீட்டுக் காவலில் வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

இன்று காலை அவரை வீட்டிலிருந்து பலவந்தமாக அப்புறப்படுத்தி, நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியினருடன் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார். இதைத் தவிர, சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவருமான எம்.எஸ். திரவியம், வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெ. டில்லிபாபு ஆகியோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாளை காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்த திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக நாட்டில் சில பிரச்சினைகளுக்காக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிற உரிமை அனைவருக்கும் உண்டு. அந்த உரிமையை மறுக்கிற வகையில், காவல்துறையினர் வரம்பு மீறி கடுமையாக நடந்து கொண்டதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சட்ட ஒழுங்கிற்கு உட்பட்டு பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினரை வீட்டுக் காவலில் வைத்து கைது செய்த காவல் துறையினரின் அத்துமீறிய போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக விரோத செயலாகவே கருதப்படும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினர் வீட்டுக் காவலில் கைது: கே.எஸ்.அழகிரி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,PM Modi ,KS Azhagiri ,Chennai ,Modi ,Tamil Nadu Congress ,President ,Tamil Nadu ,
× RELATED செபி தலைவருக்கு எதிராக புகார்கள்...