×

எதிர்க்கட்சிகள் விட்டுத்தந்தால் 2024ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது சாத்தியம்: கபில் சிபல் கருத்து

புதுடெல்லி: ‘எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் விட்டுத்தர தயாராக இருந்தால், 2024ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன’ என மாநிலங்களவை எம்பி கபில் சிபல் கூறி உள்ளார். பாஜவுக்கு எதிரான ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளின் முக்கியமான ஆலோசனை கூட்டம் வரும் 23ம் தேதி பீகாரின் பாட்னாவில் நடக்க உள்ளது. இதற்கு முன்பாக, மாநிலங்களவை எம்பியும் மூத்த அரசியல் தலைவருமான கபில் சிபல் அளித்துள்ள சிறப்பு பேட்டி: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசின் வெற்றி, பாஜவை தோற்கடிக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால், அதே வேகத்தில் 2024 மக்களவை தேர்தலைப் பற்றி பேசுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், மக்களவை தேர்தல் முற்றிலும் மாறுபட்ட அடிப்படையில் போட்டியிடப்படும் தேர்தலாகும்.

2024ல், மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன. அதற்கு மூன்று விஷயங்கள் முக்கியமாக நடக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு பொதுவான நோக்கம் இருக்க வேண்டும். அதை செயல்படுத்துவதற்காக திட்டமிடல் வேண்டும். கடைசியாக நிறைய கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும். அதாவது தேர்தலில் சீட் ஒதுக்கீட்டின் போது பரஸ்பரம் விட்டுத்தர எதிர்க்கட்சிகள் தயாராக இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் இடையே வேறுபாடுகள் அதிகம் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. உதாரணமாக, ராஜஸ்தான், உத்தரகாண்ட், அரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் பாஜவுக்கு நேரடி போட்டியாக காங்கிரஸ் உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் எந்தப் பிரச்னையும் இல்லை. மேற்கு வங்கம் போன்ற காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி அரசாங்கங்கள் இருக்கும் மாநிலங்களில் எந்த விதமான மோதலும் ஏற்படாத சில தொகுதிகள் மட்டுமே இருக்கும். அதேபோல், தமிழகத்தில் திமுகவும், காங்கிரசும் பல தேர்தல்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் இணைந்து போட்டியிட்டு வருகின்றன. தெலங்கானா, ஆந்திராவில் எந்த எதிர்க்கட்சி கூட்டணியும் இருக்க வாய்ப்பில்லை என்பதால் பிரச்னை இருக்காது. பீகாரிலும் எந்த பிரச்னையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எதிர்க்கட்சி கூட்டணி குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, இந்தியாவுக்கான புதிய தொலைநோக்குப் பார்வையைப் பற்றி பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஸ்திரத்தன்மை எங்கே?

கபில் சிபல் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி அளித்த ஸ்திரத்தன்மை வாக்குறுதி எங்கே? மணிப்பூரில் என்ன நடக்கிறது. ஒன்றிய அரசு தனது சூழ்ச்சிகள் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சீர்குலைப்பதால் ஆட்சியில் ஸ்திரத்தன்மை ஏற்படாது. இது நாட்டில் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கான விதைகளை விதைத்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளில் நியாயமான அரசியல் ஸ்திரத்தன்மை வழங்கப்பட்டதால் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டது’’ என்றார்.

The post எதிர்க்கட்சிகள் விட்டுத்தந்தால் 2024ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது சாத்தியம்: கபில் சிபல் கருத்து appeared first on Dinakaran.

Tags : Congress coalition government ,Kapil Sibal ,New Delhi ,Congress ,United Progressive Alliance government ,
× RELATED இவிஎம்மில் முறைகேடு கண்டுபிடிப்பது...