×

வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய பாஜ அரசு அரசியல் செய்கிறது: துரை வைகோ கண்டனம்

நெல்லை: ‘தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்காமல் ஒன்றிய பாஜ அரசு அரசியல் செய்கிறது’ என்று துரை வைகோ தெரிவித்தார். நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தென் மாவட்டங்களை பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்த நேரத்தில் அரசியல் பார்க்காமல் ஒன்றிய அரசு செய்திருக்க வேண்டும். ஆண்டுதோறும் ரூ.1200 கோடி பேரிடர் நிதி ஒதுக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிப்படை கட்டமைப்பை சீர் செய்ய பல ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஒன்றிய அரசு தற்போது வழங்கும் நிதியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால்தான் கூடுதல் நிதியை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் பேசுகின்றனர். ஒன்றிய அரசு தற்போது ஒதுக்கிய நிதியை வைத்து மிக்ஜாம் சேதத்தைக் கூட சரி செய்ய முடியாது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டால் பல ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க தேவைப்படுகிறது. ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்காமல் இருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாடு அரசின் மீது கோபமடைந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் ஒன்றிய அரசு இதுபோன்று நினைக்கிறது. தமிழ்நாடு மக்களுக்கு பாஜ மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. தமிழ்நாடு மக்கள் திராவிடத்தின் பின்னால் இருக்கின்றனர் என்ற எண்ணத்தை மனதில் வைத்து ஒன்றிய பாஜ அரசு இவ்வாறு செயல்படுவதாக தெரிகிறது. மக்கள் பாதிப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது. பாஜவினர் மழை, வெள்ள பாதிப்பை வைத்து கேவலமான அரசியல் செய்து வருகின்றனர். இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.

The post வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய பாஜ அரசு அரசியல் செய்கிறது: துரை வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Union BJP govt ,Durai Vaiko ,Nellai ,Union BJP government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி பேட்டி