×

கலவை அடுத்த செம்பேடு கிராமத்தில் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவி

*தமிழக அரசு உதவி செய்ய பெற்றோர் கோரிக்கை

கலவை : கலவை அடுத்த செம்பேடு கிராமத்தில் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு உதவி செய்யவேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் கலவை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(42), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வித்யா. தம்பதிக்கு அருண்பிரசாத்(16), சபரி(12), ஹரிணி(15), ஸ்ரீவேதா(9) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கே.வேளூர் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹரணி 5ம் வகுப்பு படிக்கும் போது வலது கையில் சிறியதாக கருப்பு நிறத்தில் வந்ததாக தெரிகிறது. அப்போது பெற்றோர்கள் பூச்சிக்கடி என்று நினைத்து வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். முதலில் சாதாரணமாக நினைத்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து வலது கால், வலது கை, முகம், தாடை என ஒரு பக்கம் முழுவதும் அந்த கருப்பு நிறம் பரவ தொடங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் கர்நாடகா மாநிலம், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லையாம்.

தொடர்ந்து, மாதாமாதம் பெங்களூரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். மேல் சிகிச்சை செய்ய போதிய பண வசதியில்லாததால் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு தனது மகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ஹரணியின் தந்தை சுரேஷ் கூறுகையில், ‘செம்பேடு கிராமத்தில் நான் கூலி வேலை செய்து வருகிறேன். என்னுடைய மகளுக்கு உறவினர் உதவியுடன் மாதாமாதம் சிகிச்சை அளித்து வருகிறோம்.

என்ன நோய் என்று மருத்துவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை. நாட்கள் அதிகமாக அதிகமாக எனது மகளுக்கு நோயும் அதிகரித்து வருகிறது. உதவி செய்யுமாறு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளேன். என்னுடைய மகளுக்கு உதவி செய்ய முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். தமிழக அரசு சார்பில் உதவி செய்தால் மட்டுமே என் மகளுக்கு சிக்ச்சை அளிக்க முடியும் ’ என்றார்.

The post கலவை அடுத்த செம்பேடு கிராமத்தில் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவி appeared first on Dinakaran.

Tags : Sembedu village ,Tamil Nadu Govt ,Cembedu village ,
× RELATED பரந்தூர் விமான நிலைய திட்டம்: நிலம்...