×

சாதனைகளை பட்டியலிட்டார் நட்டா: 9 ஆண்டு பாஜ ஆட்சி நிறைவு

புதுடெல்லி: ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சாதனைகளை பட்டியலிட்டார். பிரதமர் மோடி தலைமையில் ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அமைத்தது. 5 ஆண்டு ஆட்சிக்கு பின் 2019 மக்களவை தேர்தலில் மீண்டும் 2வது முறையாக பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. இந்நிலையில், தற்போது பாஜ அரசு தனது 9 ஆண்டு கால ஆட்சியை நேற்றுடன் நிறைவு செய்தது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் 9ம் ஆண்டு ஆட்சி நிறைவை பாஜ கட்சி, சுமார் 1 மாதம் கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் 9 ஆண்டு ஆட்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு அளித்த பேட்டியில், ‘‘பாஜ ஆட்சியில் அனைத்து துறைகளிலும் அனைவரையும் உள்ளிடக்கிய வளர்ச்சியை நாடு கண்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் சமத்துவம் மற்றும் சமமான வாய்ப்பை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. கடந்த 9 ஆண்டில் ஜன்தன், ஆதார், மொபைல் மூன்றையும் பயன்படுத்தி பொது சேவை வழங்கல் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னுதாரண மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த அரசு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, நிர்வாகத்தில் ஓட்டைகளை அடைக்க தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கருவிகளை திறம்பட பயன்படுத்தி உள்ளது’’ என பாஜ அரசின் சாதனைகளை புகழ்ந்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தோல்விகளை கூற காங். ஏற்பாடு
இதற்கிடையே, பாஜ அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மக்கள் மத்தியில் எடுத்துரைக்க, அடுத்த 3 நாட்களில் முக்கியமான 35 நகரங்களில் ‘ஒன்பது ஆண்டுகள் ஒன்பது கேள்விகள்’ என்ற தலைப்பில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

The post சாதனைகளை பட்டியலிட்டார் நட்டா: 9 ஆண்டு பாஜ ஆட்சி நிறைவு appeared first on Dinakaran.

Tags : Natta ,New Delhi ,Baja ,National Democratic Alliance Government ,Nata ,
× RELATED மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜ அனுமதிக்காது ; ஜே.பி.நட்டா பிரசாரம்