×

பெண் கல்வியோடு குழந்தை பிறப்பு ஒப்பீடு முதல்வர் நிதிஷ்குமார் கருத்தால் பீகார் சட்டப்பேரவையில் அமளி: பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பெண் கல்வி மற்றும் குழந்தை பிறப்பு கட்டுப்பாடு ஆகியவற்றை ஒப்பீடு செய்து கூறிய கருத்தால் நேற்று பீகார் சட்டப்பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
நேற்று முன் தினம் பீகார் சட்டபேரவையில் பேசிய நிதிஷ்குமார், ‘கணவனின் செயலால் அதிக குழந்தை பிறப்பு ஏற்படுகிறது. கல்வி பெற்ற பெண் தாம்பத்யத்தில் ஈடுபடும்போது குழந்தை பிறப்பை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று அறிவாள். அதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறையும். முன்பு 4.3 ஆக இருந்த பிறப்பு விகிதம் தற்போது 2.9 ஆக குறைந்துள்ளது’ என்று பேசினார். அதனையடுத்து நேற்று காலை 11 மணியளவில் எதிர்க்கட்சிகளின் பெரும் அமளியோடு சட்டப்பேரவை கூடியது.

எதிர்க்கட்சி தலைவர் விஜய் குமார் சின்ஹா எழுந்து, ‘நிதிஷ் குமாருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. மாநில பெண்களை அவர் அவமதித்துள்ளார். ஆட்சி செய்ய தகுதியற்றவர் என்பதால் பதவி விலக வேண்டும்’ என்று குற்றம் சாட்டினார். அதனையடுத்து பேசிய நிதிஷ்குமார், ‘என் கருத்துக்காக மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை எப்போதும் வலியுறுத்துகிறேன். அதில் ஒரு தொடர்பு இருப்பதை நான் அறிந்துள்ளேன். பெண் அதிகாரம் மற்றும் முன்னேற்றத்துக்கு நான் எப்போதும் துணை நிற்கிறேன்’ என்றார். ஆனால், பாஜ உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.

The post பெண் கல்வியோடு குழந்தை பிறப்பு ஒப்பீடு முதல்வர் நிதிஷ்குமார் கருத்தால் பீகார் சட்டப்பேரவையில் அமளி: பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Nitish Kumar ,Bihar Assembly ,Patna ,Bihar ,
× RELATED நிதிஷை நீக்கும் வரை முடி...