×
Saravana Stores

நிறுவனம், ஊழியர் இருதரப்பும் ஹேப்பி ஆரோக்கியம், மகிழ்ச்சியை தருகிறது ஒர்க் ப்ரம் ஹோம்: ஆய்வில் தகவல்

அடிலெய்டு: வீட்டில் இருந்தே அலுவலக வேலை பார்க்கும் வசதியால் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி மேம்பட்டிருப்பதாகவும் நிறுவனங்களுக்கும் இது சாதகமான பலன்களை தருவதாகவும் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நமக்கு பல இன்னல்களைத் தந்தாலும், ஒர்க் ப்ரம் ஹோம் எனும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறையை சாத்தியமாக்கி உலகிற்கே மிகப்பெரிய நன்மையை செய்துள்ளது என்றால் அது மிகையல்ல.

கொரோனா காலகட்டத்தில் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்தன. இன்றளவும் சில ஊழியர்கள் ஒர்க் ப்ரம் ஹோமை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மாதத்தில் சில நாள் அலுவலகம், பல நாள் வீடு என மாறி மாறி வேலை செய்யும் ஹைபிரிட் முறையும் வந்துவிட்டது. இந்நிலையில், ஒர்க் ப்ரம் ஹோம் நல்லதா கெட்டதா என்பது குறித்து சவுத் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சில சுவாரஸ்யமான முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆஸ்திரேலியாவை பொறுத்த வரையில் ஒர்க் ப்ரம் ஹோம் மூலம் ஊழியர்களுக்கு வாரத்திற்கு 4.5 மணி நேர பயண நேரம் குறைகிறது. அலுவலகத்திற்கு சென்று வரும் அலைச்சல் இல்லாததால், இந்த கூடுதல் நேரத்தில் 43 சதவீதம் பேர் அதிக நேரம் வேலை செய்கின்றனர். 9 சதவீதம் பேர் குடும்பத்தினரை கவனித்துக் கொள்வதில் செலவிடுகின்றனர்.

33 சதவீதம் பேர் ஓய்வு எடுக்கின்றனர் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதுவே அமெரிக்காவில் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒர்க் ப்ரம் ஹோம் செய்வதால் பலர் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் தினசரி ஈடுபடுவதாக கூறி உள்ளனர். அதிக நேரம் கிடைப்பதால், அருகில் உள்ள கடைக்கு சைக்கிளில் செல்வது, பராமரிப்பு நிலையங்களில் இருந்து குழந்தைகளை அழைத்து வர நடந்தே செல்வது போன்ற பழக்கங்கள் வழக்கமாகி இருப்பதாக கூறி உள்ளனர்.

ஓட்டலுக்கு செல்லாமல், வீட்டிலேயே சத்தான உணவுகளை சமைத்து சாப்பிடும் வாய்ப்பை தந்துள்ளதாக கூறி உள்ளனர். இருப்பினும் ஜப்பானில் ஒர்க் ப்ரம் ஹோம் செயல்முறை ஜப்பானியர்கள் மத்தியில் சற்று சோம்பேறித் தனத்தை கொண்டு வந்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஒர்க் ப்ரம் ஹோம் ஊழியர்கள் மத்தியில் ஒருவித மனநல பாதிப்புகள், தனிமை உணர்வை ஏற்படுத்தினாலும் தற்போது சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஒர்க் ப்ரம் ஹோம் செய்பவர்களின் ஆரோக்கியம், மகிழ்ச்சி அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்களின் பணித்திறனும் மேம்பட்டுள்ளதாக நிறுவனங்கள் கூறி உள்ளன. குறிப்பாக பெண்கள், தாய்மார்கள், பெரியவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளவர்களுக்கு ஒர்க் ப்ரம் ஹோம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது என்கின்றனர்.

The post நிறுவனம், ஊழியர் இருதரப்பும் ஹேப்பி ஆரோக்கியம், மகிழ்ச்சியை தருகிறது ஒர்க் ப்ரம் ஹோம்: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Adelaide ,Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி