×

ஊரப்பாக்கத்தில் அனைத்து பணிகளிலும் கமிஷன் கேட்டு துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு: திமுக ஊராட்சி மன்ற தலைவர், எம்எல்ஏவிடம் புகார்

கூடுவாஞ்சேரி: அனைத்து பணிகளிலும் 30 சதவீதம் கமிஷன் கேட்டு துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக, துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மீது திமுக ஊராட்சி மன்ற தலைவர், எம்எல்ஏவிடம் புகார் கூறினார். இதனால், ஊரப்பாக்கம் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு வருகை தந்த அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் ரேகாகார்த்திக் உள்பட 8 வார்டு உறுப்பினர்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காமல் அலுவலகத்திற்குள் சென்று ஒரு அறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மறுபுறம் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதனால், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், உள்ளிருப்பு போராட்டம் நடத்திய துணை தலைவர் உள்ளிட்ட 8 ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் நேரில் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், மாலையில் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமா நேரில் வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துணை தலைவர் மற்றும் 8 வார்டு உறுப்பினர்களிடம் நேற்று முன்தினம் இரவு 8 மணி வரை பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து, பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துணை தலைவர் மற்றும் 8 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2 வருடமாக எங்கள் வார்டு பகுதிகளில் எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை. சரியான முறையில் குப்பை வண்டிகள் வருவது கிடையாது. ஊராட்சியில் வரவு, செலவு கணக்குகள் சரியில்லை. தீர்மானங்களில் எங்களிடம் கையொப்பம் பெறவில்லை.

தலைவரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தால் அதற்கு உரிய பதில் தலைவர் தருவதில்லை. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் நாங்கள் புகார் மனு அளித்தோம் அதற்கு கலெக்டர் இதுவரை எந்தவிதமான பதிலும் கூறாததால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றார். ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் குறித்து ஊரப்பாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: ஊராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சாலை, கால்வாய், தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் பராமரிப்பு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுள்ளன.

அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. வரவு, செலவு கணக்குகள் முறையாக பராமரிக்கப்படுகிறது. துணை தலைவர் அதிமுக என்பதால் தொடர்ந்து பிரச்னை செய்து வருகின்றனர். 30 சதவீதம் கமிஷன் கேட்டு மிரட்டுகின்றனர். இதில், கமிஷன் கொடுக்க மறுப்பதால் எந்த பணியையும் செய்யவிடாமல் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால், ஊராட்சியில் மக்களின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கிறது. எனவே இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்து, செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏவிடம் புகார் கூறியுள்ளோம்’ என்றார்.

The post ஊரப்பாக்கத்தில் அனைத்து பணிகளிலும் கமிஷன் கேட்டு துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு: திமுக ஊராட்சி மன்ற தலைவர், எம்எல்ஏவிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : DMK panchayat president ,MLA ,Guduvanchery ,Vice President ,Ward ,Gram Sabha ,DMK Panchayat Council ,President ,Dinakaran ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு