×

5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.26.50 அதிகரிப்பு: 15 நாட்களுக்கு முன் குறைத்துவிட்டு மீண்டும் ஏற்றம், வீட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை

சேலம்: 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், நாடு முழுவதும் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை ரூ.26.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ரூ.1,968.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றியமைத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன.

இதனால், நடப்பாண்டு துவக்கத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை, வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு, ரூ.1,100க்கு மேல் விற்கப்பட்டது. இச்சூழலில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் வந்ததால், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு ரூ.200 குறைத்தது. இதனால், சென்னையில் ரூ.918.50 ஆக குறைந்தது. தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நிலையாக வைத்துக்கொண்டனர்.

இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான (டிசம்பர்) புதிய விலையை, நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதில், தொடர்ந்து 4வது மாதமாக நடப்பு மாதமும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் நிலையாக வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் ரூ.21 முதல் ரூ.30 வரை அதிகரித்துள்ளனர். இதனால், சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,942ல் இருந்து ரூ.26.50 அதிகரித்து ரூ.1,968.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நேற்று முன்தினத்துடன் முடிந்த நிலையில், நேற்று வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய பாஜ அரசு அதிகரித்துள்ளது. தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, அதாவது கடந்த நவம்பர் 16ம் தேதி, இதே வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை திடீரென ரூ.57.50 குறைத்தனர்.

ஆனால், 15 நாட்கள் ஆன நிலையில் தற்போது விலையை ரூ.30 வரை அதிகரித்துள்ளனர். ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிகளவு இருப்பதாக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதால், அதன் விலையை உயர்த்தாமல் அப்படியே நிலையாக வைத்துக் கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், வரும் மாதங்களில் சிலிண்டர் விலையை குறைக்கும் நடவடிக்கையை, ஒன்றிய பாஜ அரசு எடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.26.50 அதிகரிப்பு: 15 நாட்களுக்கு முன் குறைத்துவிட்டு மீண்டும் ஏற்றம், வீட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்டது 18...