×

கலர்ஃபுல் பேட்ஜ்களில் கலக்கல் பிஸினஸ்!

உலக உயிர்களிலேயே தனது சக்திக்கு மீறிய வாழ்க்கை முறை மற்றும் போராட்டங்களை அதிகம் சந்திப்பது மனித இனம்தான். மற்ற உயிர்கள் எல்லாம் உணவு, உறக்கம், இனப்பெருக்கம் என்றிருக்க மனிதன் மட்டுமே வீடு, சொத்து, வேலை, குடும்பம், வேலையில் உயரதிகாரிகளின் அழுத்தம், குடும்பப் பிரச்னை, குழந்தைகள் படிப்பு, வீட்டுப் பெரியவர்களின் அறிவுரைகள் என எங்கே எதை எடுத்துக்கொள்வது, எதை விடுவது என தினம் தினம் போராட்டமான வாழ்க்கை எனில் அது மனிதனுக்குத்தான். அப்படி இருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே மகிழ்வாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள நிறைய சின்னச் சின்ன விஷயங்களைப் பார்த்துப் பார்த்து செய்வதுண்டு. அலுவலக டேபிளில் ஒரு சின்னச் செடி, கார்டூன் பென் ஸ்டாண்டுகள், வீட்டில் தோட்டம், ஸ்மைலி சிம்பள்களில் காரில் தலையணைகள் இதெல்லாம் நம்மை நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட வைக்க உதவும் சில காரணிகள். அப்படித்தான்

கார்த்திகா பிரியதர்ஷினி (எ) காரினி குட்டிக் குட்டி நேர்மறை எண்ணங்களை பிரதிபலிக்கும் அழகிய பேட்ஜ்களை உருவாக்குகிறார். எனக்கு சொந்த ஊர் சென்னை, அப்பா பாபு, அம்மா சிவகாமி, ரெண்டு பேருமே அரசு பணியாளர்கள், நான் எம்.பி.ஏ படிச்சிருக்கேன். சின்ன வயதிலே இருந்தே நல்லா வரைவேன். மேலும் டிஜிட்டல் ஆர்ட் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிஸினஸ் ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த ‘வுட்பிரின்ட்ஸ்’. டிஜிட்டல் பிரின்ட் அடிப்படையிலே எல்லாம் அக்ஸசரிஸ்களும் கிடைக்கும். ஸ்கரன்ச்சீஸ், ஹேர் பேண்ட்ஸ், லேப்டாப் ஸ்டிக்கர்கள், நோட் பேட், மெமோ பேட், பிளான் நோட் ஸ்டிக்கர்கள், பேட்ஜ்கள், ஃபிரிட்ஜ், பீரோ காந்த பேட்ஜ்கள், பேட்ஜ் இப்படி நிறைய. அதிலே இந்த பேட்ஜ்கள்தான் எப்போதும் ஹைலைட்டா விற்பனை ஆகுது. பாசிடிவ் வைப் இருக்கற வாசகங்கள், கியூட் கார்டூன்கள், சூப்பர் ஹீரோ கேரக்டர்கள், இப்படி நிறைய பேர் கேட்டு வாங்குவாங்க. சிலர் ரக்கெட் கேர்ள், பாய், பாஸ் லேடி, கேர்லெஸ் கை இப்படி எல்லாம் கூட கூலான பேட்ஜ்கள் சொல்லி வாங்குவதும் உண்டு’ என்னும் காரினிக்கு குறைந்தது 25 பேட்ஜ்கள் முதல் 1000 வரையில் கூட மொத்த ஆர்டர்களுக்கும் பேட்ஜ்கள் செய்து கொடுக்கிறார்.

‘ பர்த்டே ஃபங்ஷன், திருமணம், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், ஸ்கூல், கல்லூரி விழாக்கள் ஏன் நண்பர்கள் சந்திப்பிலே கூட இந்த பேட்ஜ்கள் மொத்தமா ஆர்டர் கொடுத்து வாங்கிக்கறாங்க. இந்த தன்னார்வலர்கள் அமைப்புகள்லயும் சில சமயம் வாங்குவதுண்டு. எங்கே இருந்தாலும் வாலன்டியர்கள் அடையாளப்படுத்திக்கவும் கூட இந்த பேட்ஜ்கள் கம்பெனி லோகோக்கள், அல்லது நிகழ்ச்சியினுடைய பெயர்கள் போட்டு வாங்கிக்கறதும் உண்டு. சிலர் அன்பளிப்புகள்ல ஃபிரிட்ஜ், பீரோ காந்த ஸ்டிக்கர்களாகவும் கொடுப்பாங்க. எந்த சீசனுக்கும் குட்டியா ஒரு அன்பளிப்பு கொடுக்கணும்னா இந்த பேட்ஜ்கள் நல்ல சாய்ஸ். ரூ. 25 துவங்கி ரூ. 50ல் இதன் விலை இருக்கு. மொத்தமா 25 எண்ணிக்கையிலே துவங்கினால் ரூ.25க்கே செய்து கொடுப்பேன்’ என்னும் காரினிக்கு கணவர் கார்த்திகேயனின் ஆதரவும் இப்போதுவரை தன்னை பயணிக்க வைக்கிறது என்கிறார்.

‘எம்.பி.ஏ படிச்சிட்டு நல்ல ஐடி ஹெச்.ஆர், அல்லது அரசு வேலைன்னு செய்வேன்னு நினைச்சா இப்படி பேட்ஜ்கள்ல நேரத்தை செலவிடுறியேன்னு எங்க அப்பா, அம்மா உட்பட செம கோபம். இப்போ வரைக்குமே படிச்ச படிப்புக்கு வேலை செய்ய மாட்டேங்கறேன்னு சின்னக் கோபம் அப்பா, அம்மாவுக்கு உண்டு. ஆனாலும் சில மாதம் பிஸினஸ் நஷ்டமாகும், அப்போ திட்டிக்கிட்டே கூட எனக்கு உதவிடுவாங்க, அது ஒரு வகையான பாசம். என் கணவர் கார்த்திகேயன், ஒரு தனியார் நிறுவனத்திலே வேலை செய்கிறார், என்னுடைய ஆர்ட் ஆர்வம் மற்றும் டிஜிட்டல் பிரின்ட் ஆர்வத்தை புரிஞ்சிக்கிட்டார். மேலும் ஒரு சின்ன மருத்துவ சிகிச்சை காரணமா வீட்டிலே இருந்தேன், அப்போதான் அவர் உனக்குப் பிடிச்சதைச் செய்ன்னு சொன்னார். ஒரு பிஸினஸ் பிக்கப் ஆகற வரைக்கும் அதிலே ஏற்ற இறக்கம் இருக்கும். அப்படித்தான் இந்த பேட்ஜ்களும், ஒரு மாதம் ஒன்றரை லட்சம் வரையிலும் கூட லாபம் கொடுக்கும், ஒரு சில மாதம் போட்ட காசே எடுக்க முடியாத அளவுக்கும் போயிடும். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி நான் என் மனசுக்குப் பிடிச்சதை செய்யறேன். ஆன்லைன், சோசியல் மீடியா இப்படி எல்லா பக்கமும் இப்போதான் பிஸினஸ் கொஞ்சம் கொஞ்சமா வளர்ச்சி அடையுது’ தன்னம்பிக்கையாகப் பேசுகிறார் காரினி.
– ஷாலினி நியூட்டன்

The post கலர்ஃபுல் பேட்ஜ்களில் கலக்கல் பிஸினஸ்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...