×

தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகள், பள்ளிகளில் கலைஞரின் சமூகநீதி வரலாறு பாடத்திட்டமாக இணைக்கப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் கலைஞரின் சமூக நீதி வரலாறு, பாடத்திட்டமாக இணைக்கப்படும். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறையிடம் ஆலோசிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, ‘சமூக நீதிக் காவலர் கலைஞர்’ என்ற தலைப்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சமூக நீதிக்காகக் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய தொண்டுகள் பற்றி சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் சமூக நீதிக் குழுவை, ‘சமூக நீதிக் காவலர் கலைஞர்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் உருவாகியிருக்கிறார்.

கருணாநிதியைப் பொறுத்தவரை, சட்ட ரீதியாக இருந்தாலும் சமூக ரீதியாக இருந்தாலும் சமூக நீதிக்காகப் போராடியது சாதாரணமானதல்ல. அவரை பற்றி எல்லா மாணவர்களிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அனைத்து கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கலைஞரின் சமூகநீதி வரலாறு, பாடத்திட்டமாக இணைக்கப்படும். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறையிடம் ஆலோசிக்கப்படும். அதற்கான பாடப் புத்தகங்களும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள், பள்ளிகளில் இது சம்பந்தப்பட்ட கட்டுரைப் போட்டி, கவிதை போட்டிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அனைத்து கல்லூரிகளிலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதி தத்துவத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். பெண்ணுரிமை, மாற்றுத்திறனாளிகளுடைய உரிமை அனைத்தையும் இணைத்து இளைஞர்களுக்கு அதை தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்த வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அனைவரும் ஒரு முடிவை எடுத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகள், பள்ளிகளில் கலைஞரின் சமூகநீதி வரலாறு பாடத்திட்டமாக இணைக்கப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Ponmudi ,CHENNAI ,Dinakaran ,
× RELATED முதல்வர் அறிவிக்கும் அரசு திட்டங்களை அதிகாரிகள் கொண்டு சேர்க்க வேண்டும்