×

ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கியது

சென்னை: ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவியை கொலை செய்த வழக்கில் மகளிர் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை நேற்று தொடங்கியது. பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீசும் காதலித்தனர். இந்நிலையில், சத்யாவின் பெற்றோர் எதிர்ப்பால் சதீசுடன் பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சதீஷ், கடந்தாண்டு அக்டோபர் 13ம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து சதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., பரிந்துரைப்படி, சதீஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து சதீஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.ஹெச்.பாரூக் முன்பு நேற்று தொடங்கியது. அப்போது, சம்பவத்தை நேரில் பார்த்த இளம்பெண் நேரில் ஆஜராகி, சாட்சியம் அளித்தார். அவரிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் ரவிந்திர நாத் ஜெயபால் விசாரித்தார்.

The post ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai Women's Court ,Chennai ,Women's Court ,
× RELATED பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கு...