×

கலெக்டர் அலுவலகம் அருகே ராமன்நகர் தடுப்பணையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

*தொற்று நோய் பரவும் அபாயம்

*அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, தடுப்பணையில் ஆண்டுக்கணக்கில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, வத்தல்மலை ரோடு 3 ஊராட்சிகள் சந்திக்கும் எல்லையில் ராமன்நகர் தடுப்பணை உள்ளது. தடங்கம், இலக்கியம்பட்டி மற்றும் உங்காரனஅள்ளி ஊராட்சிகள் சந்திக்கும் இடத்தில் உள்ள இந்த தடுப்பணை, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த தடுப்பணை வழியாக, 50 ஆண்டுகளுக்கு முன்பு சுத்தமான தண்ணீர் சென்றுள்ளது. ஆடிப்பெருக்கு போன்ற விசேஷ காலங்களில் மக்கள் இந்த தண்ணீரில் குளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இந்த நீர்வழித்தடத்தில் வத்தல்மலையில் பெய்யும் மழைநீர் லளிகம் ஏரி, நார்த்தம்பட்டி ஏரி, அதியமான்கோட்டை சோழவராயன் ஏரி, ஏ.ஜெட்டிஅள்ளி ஏரியை நிரப்பியவாறு இலக்கியம்பட்டி ஏரியை நோக்கி வரும். ஆனால், தற்போது இந்த ஏரிக்கு வரும் நீர் வழித்தடங்கள் புதர் மண்டியும், ஆக்கிரமிப்பு பிடியிலும் சிக்கியுள்ளன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், நிதி ஆதாரம் இல்லை என்று கூறி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேரு நகர், அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட சுமார் ஒருகிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளிலிருந்தும், கடைகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர் இந்த தடுப்பணையில் வந்து கலக்கிறது.

இந்த கழிவுநீர் வெளியே செல்ல வழிவகை செய்யப்படவில்லை. இதனால், கழிவுநீர் பல ஆண்டுகளாக தேங்கி நிற்கிறது. கொசு உற்பத்தியாகும் கேந்திரமாக மாறி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆண்டு முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்பதால், நிலத்தடிநீரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் இந்த தடுப்பணையில் இருந்து, பாம்புகள் குடியிருப்புகளுக்கு வந்து விடுகின்றன. மேலும் தவளை, அட்டைபூச்சிகளும் அதிகம் வருகின்றன. எனவே, கலெக்டர் இந்த தடுப்பணையை நேரில் ஆய்வு செய்து, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தர்மபுரி வந்தபோது, ராமன்நகர் தடுப்பணையை நேரில் ஆய்வு செய்தார். ஆனாலும், தடுப்பணையில் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியே செல்ல மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள், கிராமமக்கள் மனு அளித்தால் பொதுப்பணித்துறை, ஊரகத்துறை என மாற்றி மாற்றி துறைகள் மனுக்கள் செல்கிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ராமன்நகர் தடுப்பணையில் கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் வெளியே செல்ல வழிவகை செய்யாமல், ஒரே இடத்தில் ஆண்டுகணக்கில் தேங்குவதால் நீர் மாசுயடைந்துள்ளது. நீர்வழித்தடம் முழுவதும் செடி, கொடிகள் என ஆள் உயரத்திற்கு புதர்கள் மண்டி கிடக்கிறது. இரவு நேரத்தில் பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருகிறது.

எனவே, மாவட்ட கலெக்டர், பிடிஓ, ஊராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை இணைந்து தேங்கியுள்ள கழிவுநீர் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ராமன்நகர் தடுப்பணையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சனத்குமார் நதி கால்வாயை தூர்வார ரூ.60 கோடி மதிப்பீடு தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டத்துடன், ராமன்நகர் தடுப்பணையும் தூர்வார பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,’ என்றனர்.

The post கலெக்டர் அலுவலகம் அருகே ராமன்நகர் தடுப்பணையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Ramannagar dam ,Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...