கோவை: நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019 பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 35 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ள நிலையில், கூடுதல் ரயில்கள் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கோவையில் இருந்து சென்னைக்கு ஒரு வந்தே பாரத் ரயில் சேவை உள்ளது. இந்நிலையில், கோவையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வரும் 30ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அன்று காலை 11 மணி அளவில் துவக்கி வைக்கவுள்ளார்.
கோவையில் இருந்து புறப்படும் ரயில் சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு 5 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடையும். மொத்தம் 8 பெட்டிகள் இருக்கும். இதில், ஏ.சி சேர் கார் வகுப்பில் பயணம் செய்ய ரூ.1,000, எக்ஸிகியூட்டிவ் சேர் காரில் ரூ.1,850 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவை-பெங்களூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையானது வரும் 30ம் தேதி துவக்கி வைக்கப்பட்டாலும், தொடர் ரயில் சேவை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கோவையில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு மதியம் சென்றடையும்.
The post கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவை: டிச.30ல் பிரதமர் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.