×

கடலோர மாவட்டங்களில் கொட்டிய மழையால் தத்தளிக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பெண்கள் முற்றுகை: விழுப்புரம், கடலூர், சிதம்பரத்தில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது; டெல்டாவில் 45,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின; வீடு இடிந்து மூன்று பேர் பலி

சென்னை: கடலோர மாவட்டங்களில் கொட்டிய கனமழையால் புதுச்சேரி தண்ணீரில் தத்தளிக்கிறது. முதல்வர் ரங்கசாமியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம், கடலூர், சிதம்பரத்தில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. டெல்டாவில் 45,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின. வீடு இடிந்து மூன்று பேர் பலியாகி உள்ளனர். அரபிகடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மேற்கு வங்ககடல், இதையொட்டி பகுதியில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 15 செமீ பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. ரெட்டியார்பாளையம் பாவாணர் நகர், ரெயின்போ குடியிருப்பு பகுதியில் மழைநீர் குட்டைபோல் தேங்கியதோடு மழை நீரோடு கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.

மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து, மழை நீருடன் கழிவு நீர் கலந்துள்ளது குறித்து கேட்டறிந்தார். அப்போது முதல்வர் ரங்கசாமியை முற்றுகையிட்ட பெண்கள், மழை காலங்களில் தாங்கள் தொடர்ச்சியாக பாதிப்பதாக குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து உடனே ஆய்வு செய்ய சொல்கிறேன் என்றார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஒரே நாளில் 24 செ.மீ மழை பெய்தது. இதனால் வாய்க்கால்கள் மற்றும் குளங்களில் தண்ணீர் நிரம்பி வருவதோடு, சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அண்ணாமலை நகர், சிவபுரி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் கனமழையால் தண்ணீர் சூழந்தது. நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்த குளம் நிரம்பியது.

பாசிமுத்தான் ஓடை மற்றும் மணலூர் அருகே உள்ள பாலுத்தங்கரை பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வெள்ள நீர் புகுந்துவிட்டது. உடனே நகராட்சி நிர்வாகம் வெள்ள நீரை அகற்றிவிட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கந்தாடு ஏரி உடைந்து 5 கிராமங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சுமார் 200 ஏக்கர் விளை நிலங்களில் சாகுபடி செய்த மணிலா, தர்பூசணி, நெல், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியது. டெல்டா மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.

அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ, வேளாங்கண்ணியில் 22 செ.மீ, நாகப்பட்டினத்தில் 21 செ.மீ, கொள்ளிடத்தில் 19 செ.மீ, திருவாரூரில் 21 செ.மீ மழை பதிவாகியிருந்தது.மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, பொறையார், தரங்கம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 20 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி நெற்பயிர்கள் நீரில் முழ்கியது. சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு பூம்புகார் சுற்று வட்டார பகுதிகளில் 3 நாட்களாக இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. சீர்காழி சட்டைநாதசுவாமி கோயிலிலும் மழைநீர் புகுந்தது.சீர்காழி தாலுகாவில் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பயிர் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை வரை சாரல் மழை பெய்தது. கனமழையால் வீடு இடிந்து நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி விச்சூர் காலனித் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி மணியம்மாள் (60), திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா அதம்பார் கிராமம் ஒத்தவீட்டை சேர்ந்த மோனிஷா (9), நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சங்கமங்கலம் ஊராட்சி பழையனூர் மேல்பாதி தெருவை சேர்ந்த அஜிஸ் (15), ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

* தாமரை பூக்களை மிதக்கவிட்டு நூதன போராட்டம்
2 நாட்களாக பெய்த கனமழையால் புதுச்சேரி – கடலூர் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சமூக ஆர்வலர் சுந்தர்ராஜன் தனது சட்டை, பேண்டின் முன்பக்கத்தை சரியாகவும், பின்பக்கத்தை கிழித்துவிட்டுக்கொண்டு, தலையில் ஹெல்மெட் அணிந்தபடி மரப்பாலம் பகுதிக்கு வந்தார். அப்போது திடீரென சாலையில் தலைக்குப்புற படுத்துக் கொண்டார். அங்கிருந்த பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் தாமரை பூக்களை மிதக்கவிட்டு, புதுச்சேரியில் தாமரை மலர்ந்துவிட்டதாகவும், இதுதான் குஜராத் மாடல் சாலை எனவும் கோஷமிட்டார். சாலையை தரமானதாக அமைக்காத ஆளும் என்ஆர்காங்கிரஸ் – பாஜ அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post கடலோர மாவட்டங்களில் கொட்டிய மழையால் தத்தளிக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பெண்கள் முற்றுகை: விழுப்புரம், கடலூர், சிதம்பரத்தில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது; டெல்டாவில் 45,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின; வீடு இடிந்து மூன்று பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangaswamy ,Villupuram ,Cuddalore ,Chidambaram ,CHENNAI ,Rangasamy ,Villupuram, Cuddalore, Chidambaram ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு மீது டெல்லியில் பாஜக...