×

டிக்… டிக்… டிக்… களிமண் மினியேச்சர் கடிகாரம்!

நன்றி குங்குமம் தோழி

நமக்கு ரொம்ப பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள், நம்முடைய உருவ பொம்மைகள், சினிமா கதாபாத்திரங்கள் எல்லாம் மினியேச்சர் பொம்மைகளாக உள்ளன. இவை பார்க்க அழகாக இருக்கும். ஆனால் எத்தனை மினியேச்சர் பொம்மைகள் வந்தாலும், பார்க்கும் போதே சாப்பிட தோன்றும் ஃபுட் மினியேச்சர் பொம்மைகளுக்கு தனி ஃபான் பேஸே இருக்கு. காலை உணவுகளில் துவங்கி மாலை சிற்றுண்டி வரை அனைத்து மாநிலங்களின் உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ், பேக்கரி வகைகள் என அனைத்து வகையான உணவுகளை மினியேச்சர் பொம்மைகளாக
வடிவமைத்து வருகிறார் சென்னையை சார்ந்த உமா காயத்ரி.

இவர் வடிவமைத்து இருக்கும் ஒவ்வொரு மினியேச்சர் உணவுகளின் வடிவமைப்பு, நிறங்கள் மற்றும் அதனை தட்டில் அலங்கரித்து இருக்கும் விதத்தினைப் பார்த்தால் ஒரு சின்ன தட்டில் மினி உணவு விருந்தினை படைத்திருப்பது போல் காட்சியளிக்கிறது. மேலும் இவர் இந்த மினியேச்சர் உணவுகளை கடிகார எண்களாக வடிவமைத்து தருகிறார். அழகாக அலங்கார பொருளாக வீட்டின் வரவேற்பு அறையில் மினியேச்சர் உணவு கடிகாரத்தினை பார்க்கும் போதே கண்களுக்கு மட்டுமில்லை நம்முடைய மனசுக்கும் ஒரு ஸ்பெஷல் டிரீட்டாக அமைகிறது. இந்த ஃபுட் மினியேச்சர் கடிகாரத்தினை நம்முடைய ஸ்பெஷல் மினியேச்சர் உணவுகள் கொண்டும் கஸ்டமைஸ் செய்து வடிவமைத்து தருகிறார்.

‘‘மேட்டூர் தனியார் கல்லூரியில் இஞ்சினியரிங் படிச்சிட்டு, திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். பின் என் கணவரின் வேலை காரணமாக 2012ல் லண்டனுக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. நம்ம ஊரில் ஐ.டி வேலையில் பம்பரமாக சுழன்று கொண்டு இருந்த எனக்கு, லண்டனில் வீட்டிலே இருக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. வீட்டில் நேரம் நிறைய இருக்க, பொழுதுபோக்கிற்காக ஆரம்பிச்சதுதான் களிமண்ணால் செய்யப்பட்ட ஃபுட் மினியேச்சர்கள்’’ என பேசத் துவங்கினார் உமா.

‘‘வெளிநாடுகளில் மினியேச்சர் பொருட்களுக்கு அதிக வரவேற்பு உண்டு. என்ன தான் மினியேச்சர்களில் அனிமேஷன் உருவங்கள், மார்வல்ஸ் உருவங்கள் என நிறைய இருந்தாலும், சாப்பாடு, ஸ்நாக்ஸ் போன்ற ஃபுட் மினியேச்சர்கள்தான் வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்த்தது. நான் ஏற்கனவே டெரகோட்டா நகைகள் செய்வேன். அதனால் இந்த ஃபுட் மினியேச்சர் செய்வதில் எனக்கு பெரிதாக சிரமம் ஏற்படவில்லை. இருந்தாலும் என்னுடைய ஃபுட் மினியேச்சர்கள் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கணும்னு விரும்பினேன். புதுவிதமா என்ன செய்யலாம்ன்னு யோசித்தேன். அதனால் அதில் பல மாடல்களை உருவாக்கினேன்.

சும்மா பொழுது போக்கிற்காக தான் நான் இதை செய்ய துவங்கினேன். ஆனால் இதுவே என்னுடைய முழு நேர வேலையாக மாறியது. நான் செய்த மினியேச்சர் உணவுகள், டெரகோட்டா நகைகள், சில டேபிள் அலங்கார பொருட்களை என்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். அதைப் பார்த்து பலர் தங்களுக்கும் வேண்டும் என்று ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தாங்க. குறிப்பாக என் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் மற்றும் லண்டனில் இருக்கும் நண்பர்கள் என ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள். மேலும் இந்தியாவில் இருந்துதான் எனக்கு அதிகமாக ஆர்டர்கள் வந்தது.

அங்கு இருப்பவர்களுக்கு உடனடியாக செய்து கொடுத்துடுவேன். ஆனால் இந்தியாவில் இருப்பவர்களுக்கு, அவர்களோட முகவரி எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டேன். காரணம் நான் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப இருப்பதால், இங்கு வந்ததும் செய்து தருவதாக அவர்களிடம் கூறிவிட்டேன். அதன்படி நான் 2015ல் இந்தியா வந்த பிறகு அவர்களின் ஆர்டர்கள் செய்து கொடுக்க துவங்கினேன்’’ என்றவர் ஃபுட் மினியேச்சர் சுவர் கடிகாரம் எப்படி தயாரித்தார் என்பதனையும் விளக்கினார்.

‘‘இந்தியா வந்த பிறகு ஃபுட் மினியேச்சர் மற்றும் க்ளே சம்பந்தமான வர்க்‌ஷாப்களை நடத்த திட்டமிட்டேன். அப்படி போகும் போது, வெறும் ஃபுட் மினியேச்சர்களை மட்டும் கைகளில் கொண்டு போகாமல் அதனை ஒரு பொருளாக செய்து கொண்டு போக விரும்பினேன். எல்லா உணவு மினியேச்சர்களை ஒருங்கிணைத்து எப்படி கொண்டு போகலாம் என்று யோசித்த போது எனக்கு அதை கடிகார எண்களாக அமைத்தால் என்ன என்று தோன்றியது.

காரணம், ஒரு கடிகாரத்தில் 12 விதமான உணவுகளை டிஸ்பிளே செய்யலாம். இப்படித்தான் ஃபுட் மினியேச்சர் சுவர் கடிகாரம் உருவாச்சு. இந்த சுவர் கடிகாரம் செய்ய ஆரம்பித்த முதல் ஆள் நான் தான். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இந்த மினியேச்சர் சுவர் கடிகாரங்கள் தயாரித்துட்டு வரேன். உதவிக்கு ஆட்கள் என்று அப்போது யாரும் வைத்துக் கொண்டதில்ை. இப்போது தான் ஒரு பெண் மட்டும் ஸ்டூடியோவில் என்னுடன் வேலை பார்க்குறாங்க. சுவர் கடிகாரம் மட்டுமில்லாமல், ஃப்ரிட்ஜ் மேக்னெட்டும் செய்து தருகிறேன்.

நான் டெரக்கோட்டா பொருட்களை பாலிமர் கிளே கொண்டு செய்வதால், அது கொஞ்சம் இருந்தது. அதைக் கொண்டு முதல் மூன்று ஆர்டர்களை முடித்தேன். அதன் பிறகு இங்குள்ள பல கடைகளில் அந்த கிளேவை தேடி அலைந்து, மொத்த விற்பனைக் கடைகளில் இந்த கிளேவினை வாங்கி வைத்துக் கொள்வேன். காரணம், நம்ம ஊரில் பாலிமர் கிளே அதிகமாக கிடைப்பது இல்லை. தற்போது எனக்கு தேவையான களிமண் எல்லாம் தாய்லாந்திலிருந்து மொத்தமாக இறக்குமதி செய்து கொள்கிறேன்.

என் வீட்டில் உள்ளவர்கள் ஐ.டி வேலையை விட்டுவிட்டு என்ன களிமண்ணோடு இருக்கேன்னு சொல்வாங்க. ஆனால் என் கணவர் என்னுடைய விருப்பத்தை புரிந்து கொண்டு எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். இப்போது இது தான் என்னுடைய முழு நேர வேலையாக மாறிவிட்டது. இதில் எனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வைத்திருக்கேன்’’ என புன்னகையுடன் கூறினார்.

‘‘ஆரம்பத்தில் உணவு மினியேச்சர் வைத்து சுவர் கடிகாரம்தான் செய்துட்டு இருந்தேன். ஆனால் வாடிக்கையாளர்கள் உணவு தவிர வேறு உருவங்கள் கொண்டு கடிகாரத்தினை வடிவமைக்க சொல்லி கேட்டாங்க. அப்படி கேட்பவர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப உருவங்களை வடிவமைத்து தருகிறேன். உதாரணத்துக்கு ஒரு துணி கடைக்கு கடிகாரம் செய்யும் போது, அதில் தையல் கலை சம்பந்தப்பட்ட ஊசி, நூல், மிஷின், துணி, பட்டங்கள், இன்ச் டேப் என ஒரு தையலகத்தினை எண்களாக அமைத்து கடிகாரம் செய்தேன்.

கார் மெக்கானிக் கடைக்கு அவர்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் உருவங்கள் வைத்து கொடுத்தோம். சுவர் கடிகாரம் என்றில்லாமல் பெயர் பலகைகள், குழந்தைகளுக்கான கார்ட்டூன் உருவங்கள், கீசெயின்கள், ஃபிரிட்ஜ் மேக்னெட்கள் போன்றவற்றையும் கஸ்டமர்களின் விருப்பத்திற்கேற்ப மினியேச்சர்களாக செய்து தருகிறேன்.

கடந்த ஆண்டு நந்தனம் YMCAவில் நடந்த புத்தக திருவிழாவில், அதன் ஒருங்கிணைப்பாளர் புத்தக திருவிழாவிற்கு வரும் முதல்வருக்கும் இதர விருந்தினருக்கும் இருபது கடிகாரம் செய்து தர சொல்லி கேட்டார். தனிநபர்களுக்கு மட்டுமில்லாமல் பல்க் ஆர்டர்களும் செய்து தருகிறேன். ேமலும் சென்னை மற்றும் வெளியூர்களில் இது குறித்து வர்க்‌ஷாப் நடத்தி வருகிறேன். இந்த பொம்மைகள் செய்வதற்கான டூல்ஸ்களும் நாங்களே உற்பத்தி செய்வதால், வர்க்‌ஷாப்பிற்கு வருபவர்களுக்கு மட்டுமில்லாமல் கடைகளுக்கும் இந்த டூல்ஸ்களை சப்ளை செய்கிறோம். இந்த மினியேச்சர் பொம்மைகள் அதன் அளவிற்கு ஏற்ப ரூ.400 முதல் 13 ஆயிரம் வரை மாறுபடும்’’ என்றவர் கடந்த ஆண்டின் ஷீ மற்றும் கிரியேட்டிவ் தொழில்முனைவோர் விருதினை பெற்றுள்ளார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post டிக்… டிக்… டிக்… களிமண் மினியேச்சர் கடிகாரம்! appeared first on Dinakaran.

Tags : kumkum dothi ,Dinakaran ,
× RELATED புதுமைகளை புகுத்தினேன்… ஜெயித்தேன்!