×

கிறிஸ்தவம் காட்டும் பாதை

பாம்பைப் போல் கடிக்கும்

தொண்டு நிறுவனம் ஒன்று கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் ஒன்றினை நடத்தியது. மாலை நேரத்தில் சாராயத்தை ஒழிக்க விழிப்புணர்வு நாடகங்களை நடித்தனர். அப்போது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கண்ணாடி டம்ளர் ஒன்றில் புழுக்களை போட்டு அதில் சிறிது சாராயத்தை ஊற்றவே அவைகள் துடிதுடித்து இறந்தன. உடனே அவர் சாராயம் குடிக்கும் ஒருவரை அழைத்து ‘‘இதிலிருந்து என்ன தெரிகிறது?’’ என்று கேட்டார். அப்பொழுது அந்த குடிகாரர் ‘‘ஐயா, சாராயம் குடித்தால் நம் வயிற்றில் உள்ள புழுக்கள் சாகும்’’ என்று கூறினாராம். குடிமகனின் சேட்டையை பார்த்தீர்களா?சாராயத்தின் வீரியத்தை விளக்கவும், அது சரீரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை விளக்குவதற்கும்தான் தொண்டு நிறுவனம் முயற்சித்தது. ஆனால் ஏனோ, அறிந்தும் அறியாதவர்கள் போல நம் ஊர் குடிமகன்கள் வாழ்கின்றனர். குடி குடியை கெடுக்கும், குடிப் பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று அறிந்திருந்தும் குடிப்பழக்கத்தை கைவிட மனமில்லை.தலை முதல் கால் வரை உள்ள அனைத்து உறுப்பு களையும் பாதிக்கக் கூடிய ஒரு போதைப்பொருள் இந்த சாராயம்தான். சுகர், ரத்த அழுத்தம், வலிப்பு, ஈரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, குடல் மற்றும் வாயில் புற்று நோய், நரம்புத் தளர்ச்சி, குழந்தையின்மை போன்ற அபாயங்களை இது ஏற்படுத்தும்.

மேலும் மனரீதியாக வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மீது சந்தேகத்தையும், மனப்பதற்றத்தையும், அடிக்கடி மறதியையும் ஏற்படுத்தி வாழ்வை சுருக்கிவிடும். இத்தகைய கொடூர குணம் படைத்ததுதான் சாராயம்.‘சாராயத்தை நாடி அதிகாலையிலேஎழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருப்பது, இருட்டிப்போகுமளவும் குடித்துக் கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ’’ (ஏசாயா 5:11) என்று இறைவேதம் மதுப்பழக்கத்தை கடுமையாக எச்சரிக்கிறது.மேலும், ‘‘ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள் மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப் போல் கடிக்கும், விரியனைப் போல் தீண்டும்’’ (நீதி.24:29-32) மேற்கண்ட வசனங்கள் மதுப்பழக்கத்தின் ஆபத்தை உணர்த்துகிறது. உறவையும் உயிரையும் பறிக்கும் இந்த பழக்கம் நமக்கு தேவைதானா? குடிக்கு அடிமையாகி, குழிக்குப் போய்விடாதீர்!

– அருள்முனைவர் பெவிஸ்டன்.

 

The post கிறிஸ்தவம் காட்டும் பாதை appeared first on Dinakaran.

Tags : Christianity ,
× RELATED கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்கிய...