×

சோழிங்கநல்லூர் தொகுதியில் விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தொடங்க வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசுகையில், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கரணை, வேளச்சேரி பிரதான சாலை, மயிலை பாலாஜி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும், என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிக்கரணை, வேளச்சேரி மெயின்ரோடு, மயிலை பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 30-6-2023க்குள் முடிக்கப்படும்,’ என்றார்.

அரவிந்த் ரமேஷ்: சோழிங்கநல்லூர் தொகுதியில் விடுபட்ட பகுதிகளான கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி, ஜல்லடியன்பேட்டை, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து துவங்க வேண்டும். அதேபோல, கந்தன்சாடி, பெருங்குடி பகுதிகளில் 2010ம் ஆண்டு துவங்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் இன்றுவரை மக்கள் பயன்பாட்டு கொண்டுவரவில்லை. காரப்பாக்கம் பகுதியில் 2013ம் ஆண்டு துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் சுமார் 12 வருடங்களாகியும் இன்றுவரை பொதுமக்களினுடைய பயன்பாட்டுக்கு கொண்டுவராத ஒரு நிலை இருக்கிறது. அந்தப் பகுதிகளையும் பாதாளச் சாக்கடை பணிகளை உடனடியாக முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டு கொண்டுவர வேண்டும்.

அமைச்சர் கே.என்.நேரு: சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில், உள்ளகரம், புழுதிவாக்கம், கொட்டிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், மடிப்பாக்கம் ஆகிய 15 பகுதிகள், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளாகும். இப்பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. பணிகள் நடைபெறும்போது, நீர்வளத் துறையின் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஏற்கெனவே புதியதாகப் பதிக்கப்பட்ட கழிவுநீர் குழாய்கள் மாற்றியமைக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக, பணிகள் முன்னேற்றத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டது. தற்போது, பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் நிறைவேறும் போது, பள்ளிக்கரணை பகுதியில் வசிக்கும் சுமார் 79,260 பொதுமக்கள் பயன் பெறுவர்.

அரவிந்த் ரமேஷ்: தாம்பரம் மாநகராட்சியோடு பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், நன்மங்கலம், மேடவாக்கம், வேங்கைவாசல், ஓட்டியம்பாக்கம், கோவிலம்பாக்கம் ஆகிய 7 ஊராட்சிகள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் பாதாள சாக்கடை முதல்கட்ட திட்டப் பணிகளை இப்போதிருந்தே திட்ட மதிப்பீடுகளைத் தயாரித்து, அதற்கான முதல் கட்டப் பணிகளை துவங்க வேண்டும். சோழிங்கநல்லூர் பகுதியில் 198, 199 ஆகிய வட்டங்களில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்து, வீடுகளுக்கு இணைப்பு வழங்குகின்ற பணிகள் நடந்து வருகிறது. இதில், 10 ஆண்டுகளுக்கு, 15 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடங்களுக்கு எல்லாம் ஐடிசி என்ற உட்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணமாக மீட்டருக்கு ரூ.218 வசூலிக்கப்படுகிறது. தரை மற்றும் முதல் தளத்திற்கு மேல் ஒரே ஒரு சிறிய வீடு, ஓடு போட்ட வீடு இருந்தாலும்கூட, அதற்காக ஐடிசி கட்டண தொகையை வசூலிக்கின்றார்கள்.

இதற்காக லட்சக்கணக்கான பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதனால் பொதுமக்கள் பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள். 1998ம் ஆண்டிற்கு முன்பாக கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தால் அந்த ஐடிசி கட்டணம் இல்லை என்றார்கள். அதை 2022ம் ஆண்டாக, புதிதாக சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதி என்பதால் சிறப்பு சலுகை கொடுத்து 2022ம் ஆண்டிற்குப் பிறகு புதிதாக கட்டப்பட்ட வீடுகளுக்கு அந்த ஐடிசி கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அமைச்சர் கே.என். நேரு: உறுப்பினர் சொல்வதை அதிகாரிகளுடனும், முதல்வருடன் கலந்தாலோசித்து, அதை எப்படி குறைக்க முடியும் என்பதை கண்டறிந்து, அந்தப் பணிகள் தொடங்கப்படும். உறுப்பினர் சொன்ன பணிகளை விரைந்து முடித்து, இந்த ஆண்டுக்குள் குடிநீரும், பாதாள சாக்கடை திட்டமும் அந்தப் பகுதிகளில் இருக்கிற மொத்த மக்களுக்கும் கிடைக்கிற பணி நடைபெறும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

The post சோழிங்கநல்லூர் தொகுதியில் விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தொடங்க வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chozhinganallur ,Arvind Ramesh ,Chennai ,Choshinganallur Constituency ,MLA ,DMK ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது