×

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைப்போன்று தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதே புதிய கல்விக்கொள்கை: ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு

சென்னை: சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைப்போன்று தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதே நமது புதிய கல்விக்கொள்கை என்று கல்வி கருத்தரங்கில் ஆளுநர் ஆர்என் ரவி பேசியுள்ளார். வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் யுக்திகள் குறித்த 2 நாள் கருத்தரங்கின் நிறைவு விழா, கல்லூரி அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கருத்தங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது, என்னைப் பொறுத்தவரை 2020ல் அமல்படுத்திய தேசிய கல்விக் கொள்கையை இந்தியாவிற்கான முதல் கல்விக் கொள்கையாக பார்க்கிறேன். தமிழ்நாடு போன்ற வளர்ச்சி அடைந்த ஒரு மாநிலத்தில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட 2 மடங்கு ஜிஆர்இ இருந்தாலும் தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யாமல் உள்ளனர்.

அதற்கு காரணம் மாணவர்களிடம் தனித்திறன் இல்லை என கூறுகின்றனர். 80 – 90% பொறியியல் மாணவர்கள் பணியில் அமர்த்த முடியாத நிலை உள்ளது. 70% மாணவர்கள் கலை மற்றும் மனித வளம் சார்ந்த படிப்புகளை படிப்பதாக யுஜிசி மூலம் அறிக்கை கிடைத்துள்ளது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள் தங்கள் சொந்த மொழிகளில் படித்தே பல அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் நாமும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதனை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். என்றார்.

The post சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைப்போன்று தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதே புதிய கல்விக்கொள்கை: ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : China ,Japan ,Governor RN ,Ravi ,Chennai ,
× RELATED பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா...