சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் 5 நாட்கள் பயணமாக கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி ஏப்ரல் வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். மே 4ம் தேதி வரை 5 நாட்கள் கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். அரசாங்க ரீதியான முக்கியமான ஆலோசனைகளை கொடைக்கானலில் இருந்தே மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் வருகையையொட்டி கொடைக்கானல் பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல்வர் வருகையையொட்டி கொடைக்கானல் பகுதிகளில் இன்று முதல் வருகிற மே 4ம் தேதி வரை டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் 5 நாட்கள் பயணமாக கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார்..!! appeared first on Dinakaran.