×

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பாக சென்னை வர்த்தக மைய விரிவாக்க பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பாக சென்னை வர்த்தக மைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் சிப்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, முதலாவதாக, நந்தம்பாக்கத்தில் டிட்கோ நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும் சென்னை வர்த்தக மைய விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்தார்.

இதன் விரிவாக்கத் திட்டத்தில் 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 309 கோடி மதிப்பீல் கட்டப்பட்டு வரும், 4000 நபர்கள் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் 5 பொருட்காட்சி அரங்கங்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார். இக்கட்டுமானப் பணிகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் முழுவதுமாக முடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். அதேபோல, சிப்காட் நிறுவனம் மூலம் காஞ்சிபுரம் வல்லம் வடகாலில், ரூ.680 கோடி மதிப்பீட்டில் 18,720 தொழிலாளர்கள், பணிபுரியும் தொழிற்சாலைகளின் அருகாமையில் தங்கும் வகையில் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த பணியாளர் விடுதியினை பார்வையிட்டார்.

ஸ்ரீபெரும்புதூர், மாம்பாக்கத்தில், ரூ.16.45 கோடியில் தொழில் தொடங்குவோர் மற்றும் கண்டுப்பிடிப்பாளர்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ள சிப்காட் தொழில் புத்தாக்க மையத்தை (ஃபோர்ட்), ஆய்வு மேற்கொண்டார். இறுதியாக, திருவள்ளூர் பட்டாபிராமில் டிட்கோ நிறுவனம் மூலம் ரூ.327 கோடி மதிப்பீட்டில் 5,62,000 சதுரஅடியில் கட்டப்பட்டு வரும் டைடல் தொழில்நுட்பப் பூங்காவை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். இந்த பூங்காவில் கட்டப்பட்டுவரும் தகவல் தொழில்நுட்ப பூங்கா, 2 உணவக கட்டிடம் ஆகிய கட்டுமான பணிகளைப் பார்வையிட்டு இந்த பணிகளையும் துரிதமாக முடிக்குமாறு அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார்

The post உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பாக சென்னை வர்த்தக மைய விரிவாக்க பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Chennai Trade Center ,World Investors Conference ,Chennai ,PTI ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...