×

பெரம்பலூர் மாவட்டத்தில் 263 பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்

*16,020 குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (25ம் தேதி) அனைத்துப் பள்ளிகளிலும் “முதலமைசரின் காலை உணவுத்திட்டம்”. 263 பள்ளிகளில் 1 முதல் 5வகுப்பு வரை பயிலும் 16,020 மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் சிறப்புத் திட்டமான, முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம்-கடந்த 2022 செப்- 15ம்தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி மதுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டம் முதல் கட்டமாக செப்-16ம்தேதி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 1,545 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டது. இதன்படி பெரம்பலூர் நகராட்சியில் முத்துநகர், பெரம்பலூர் கிழக்கு, பெரம்பலூர் மேற்கு மற்றும் அரணாரை என நகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் 90 மாணவர்கள், 74 மாணவிகள் என மொத்தம் 164 பள்ளிக் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்து இருப்பதாவது:

காலை உணவு திட்டத்திற்கான உணவு தயாரிக்கும் பணிகள் காலை 5.45 மணி முதல் 6 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும். 8 மணிக்குள் உணவு சமைத்து முடித்து, 8.45 மணிக்குள் மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் எத்தனை மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது என்ற விபரத்தை பிரத்தேயக செயலி மூலமாக பதிவேற்றம் செய்திட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் முறையாக உணவு சமைக்கப்படுகின்றதா, குறித்த நேரத்தில் மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறப்படுகின்றதா, உணவு சுவையாக தரமாக உள்ளதா என்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை உடனடியாக சரி செய்திட வேண்டும். உணவு சமைப்பதற்கான பாத்திரங்கள் ஏற்கனவே அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் கூட்டுறவுத் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல் படுத்துவதற்கு ஒவ்வொரு அலுவலரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தொய்வின்றி நிறைவேற்ற வேண்டும் என்றார். இத்திட்டத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லலிதா, மகளிர் திட்ட அலுவலர் அருணாச்சலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) நாராயணன், முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செய்துள்ளனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 263 பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் appeared first on Dinakaran.

Tags : CM ,Minister ,263 school ,Perambalur district ,Perambalur ,Chief Minister ,District ,263 CM ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...