×

சிதம்பரம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் காய்ந்த நிலையில் காணப்படும் நெற்பயிர்கள்

*விவசாயிகள் கவலை

சிதம்பரம் : சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீரின்றி காய்ந்த நிலையில் காணப்படும் நெற்பயிர்களால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயந்திரம் மூலம் விவசாயிகள் நடவு பணி மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது தண்ணீர் இல்லாத காரணத்தாலும், மழை பெய்யாததாலும் நெற்பயிர்கள் காய்ந்து நிலையில் காணப்படுகிறது.

இளநாங்கூர் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இயந்திர மூலம் நடவு பணி மேற்கொண்டனர். தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் நெற்பயிர்கள் காய்ந்து காணப்படுகிறது. தரை பகுதியில் போதிய ஈரப்பதம் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அதேபோல் சிதம்பரம், சிவபுரி, குமாரமங்கலம், வேலகுடி, அகர நல்லூர், கனகரப்பட்டு, தெற்கு பிச்சாவரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

தற்போது நெற்பயிர்கள் முளைத்து வந்த நிலையில், இப்பகுதி தரையில் ஈரப்பதம் இல்லாததாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் இந்த பயிர்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. அகர நல்லூர், சிவாயம், வக்காரமாரி, வல்லம்படுகை, சிவபுரி, பெராம்பட்டு, அக்கரைஜெயங்கொண்டம் பட்டினம், திட்டுக்காட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் நாற்றங்கால் அமைக்கும் பணிக்கு, விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது பணி மேற்கொண்டு வந்திருந்தனர். மேலும் நாற்றங்காலும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்புக்கு உள்ளாக கூடிய சூழ்நிலையில் உள்ளது.
இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

The post சிதம்பரம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் காய்ந்த நிலையில் காணப்படும் நெற்பயிர்கள் appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி...