ஊட்டி: ஊட்டி- கோத்தகிரி சாலையில் பல்வேறு பகுதிகளிலும் பூத்துள்ள செர்ரி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள் மற்றும் மலர் செடிகள் அதிகளவு காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மரங்கள் மற்றும் தாவரங்களை ஊட்டிக்கு கொண்டு வந்து பயிரிட்டனர். ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் நிலவும் காலநிலை இங்கும் நிலவுவதால், அந்த நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர்கள் அதிகளவு இங்கு கொண்டு வந்து நடவு செய்யப்பட்டது.
இதில், குறிப்பாக ஜப்பான் நாட்டின் தேசிய மலரான ‘செர்ரி’ மரங்கள் அதிகளவு நீலகிரியில் காணப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் மலர்கள் என்பதால், ஜப்பான் நாட்டில் இந்த மலர் தேசிய மலராக இருந்து வருகிறது. குளிர் அதிகமாக நிலவும் இடங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் நீரோடைகளின் அருகே இந்த மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பொதுவாக அக்டோபர் மாதங்களில் ‘செர்ரி’ மலர்கள் பூக்கும். தொடர்ந்து பனிக்காலம் முடியும் வரை (4 மாதம்) ‘செர்ரி’ மலர்களை காண முடியும். இந்த ‘செர்ரி’ மலர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பூத்து குலுங்குகிறது.
தற்போது ஊட்டி- கோத்தகிரி சாலை, தேவர்சோலை போன்ற பகுதிகளில் ‘செர்ரி’ மலர்கள் பூத்துள்ளன. இந்த அரிய வகை மலர்களை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
The post ஊட்டி- கோத்தகிரி சாலையில் பூத்துகுலுங்கும் செர்ரி மலர்கள் appeared first on Dinakaran.