×

சேப்பாக்கம் பகுதியில் அதிக விலைக்கு ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்த 17 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 17 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 47 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.53,200 பறிமுதல் செய்தனர். சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. மேலும் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, வாலாஜா ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேசன், பெல்ஸ் ரோடு, அஞ்சப்பர் உணவகம் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 11 வழக்குகள் பதிவு செய்து 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 47 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.53,200 பறிமுதல் செய்தனர்.

The post சேப்பாக்கம் பகுதியில் அதிக விலைக்கு ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்த 17 பேர் கைது: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : IPL ,Chepakkam ,Chennai ,
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது