×

சென்னை பாரிமுனை அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்: மீட்பு பணிகள் தீவிரம்; உரிமையாளர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

சென்னை: சென்னை பாரிமுனை அருகே நேற்று காலை சீரமைப்பு பணியின்போது இடிந்து விழுந்த கட்டிடத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்டிட உரிமையாளர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனை அடுத்த மண்ணடி அரண்மனைகாரன் தெருவில் தனியாருக்குச் சொந்தமான 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சவுகார்பேட்டையில் வசிக்கும் வடமாநிலத்தவருக்குச் சொந்தமானது. இக்கட்டிடத்தின் கீழ் தளத்தில் 4 கடைகளும், மேல்தளத்தில் 7 வீடுகளும் உள்ளன. கட்டிடம் பழுது காரணமாக வீட்டில் குடியிருந்தவர்கள் காலி செய்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர். 4 கடைகளில் ஒரு கடை மட்டும் செயல்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக இந்த கட்டிடத்தில் சீரமைப்பு பணி நடந்து வந்தது. இதில் வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை, ஊழியர்கள் டிரிலிங் இயந்திரம் மூலம் 4வது மாடி கட்டிடத்தை இடித்துள்ளனர். அப்போது ஒரு ஊழியர் பதற்றத்துடன் கீழே ஓடிவந்துள்ளார். அவர் வந்த சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் 4வது மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் கடை உரிமையாளர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய கடை உரிமையாளரை மீட்டனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 கார்கள், மினி வேன், மீன்பாடி வண்டி, 2 இரு சக்கரவாகனங்கள் சேதமானது. கற்கள் சிதறியதில் அவ்வழியாக நடந்து சென்ற 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை, எஸ்பினேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் அங்கு வந்தன. இதில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி மூலம் 3 பொக்லைன் இயந்திரங்களில் வந்தவர்கள் கட்டிட கழிவுகளை அகற்றும்பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ரம்யாபாரதி, பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான், போக்குவரத்து துணை ஆணையர் ஹர்ஷ்சிங், தீயணைப்பு வடக்கு மண்டல இணை இயக்குனர் பிரியா, சென்னை மாவட்ட அலுவலர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். அங்கு வரவழைக்கப்பட்ட 2 மோப்ப நாய்களை இடிபாடுகளில் சிக்கியவர்களை அடையாளம் காண பயன்படுத்தி வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பவர்களை காப்பாற்ற மருத்துவக்குழுவினர்களுடன் 4 ஆம்புலன்சும் தயார்நிலையில் உள்ளது. கட்டிடம் இடிந்துவிழுந்த பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள் யாரும் அருகில் வராதவாறு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளரான சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த பரத் சந்திரன் என்பவர் மீது எஸ்பினேடு போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • அமைச்சர்கள் வருகை
    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் கேஎன் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சென்னை கலெக்டர் அமிர்தஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி அரக்கோணத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு வந்து நவீன இயந்திரங்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சென்னை பாரிமுனை அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்: மீட்பு பணிகள் தீவிரம்; உரிமையாளர் மீது 5 பிரிவுகளில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Barimuna, Chennai ,CHENNAI ,Parimuna ,Barimuna ,Dinakaran ,
× RELATED சென்னை பழைய சட்டக்கல்லூரி அருகே...