×

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாக இயக்கம்: அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை மழை பெய்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4:55 மணிக்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து, 162 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் அதே நேரத்திலும், அதன் பின்பும் வந்த மற்ற விமானங்கள் வழக்கம்போல் சென்னையில் தரை இறங்கின. இந்த விமானம் மட்டும் எதற்காக, சென்னையில் தரை இறங்காமல் பெங்களூர் திருப்பிச் சென்றது என்று பயணிகளின் கேள்வி எழுப்பியதற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

அதேபோல் லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனில் இருந்தே தாமதமாக புறப்பட்டு சென்னை வந்ததால் சென்னையில் இருந்தும் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து 12 வருகை, புறப்பாடு விமானங்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகி சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த விமானங்கள் தாமதத்திற்கு என்ன காரணம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பிலும், அந்தந்த விமான நிறுவனங்களின் தரப்பிலும் பயணிகளுக்கு முறையான அறிவிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதேபோல் சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் வருகை புறப்பாடு பற்றிய அறிவிப்பு காட்சி பலகைகளிலும், விமானங்கள் தாமதம், தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பி சென்றது போன்ற எந்த தகவலும் குறிப்பிடாமல், அனைத்து விமானங்களும் குறித்த நேரத்தில் வந்து செல்வதாக குறிப்பிட்டு பயணிகளை ஏமாற்றும் விதத்தில் இயங்கிக் கொண்டிருந்தன.

இதனால் பயணிகள் கடும் ஆத்திரங்களுடன், விமான நிலைய அதிகாரிகளிடமும், விமான நிறுவன கவுண்டர்களிடமும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். அப்போது மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். ஆனால் விமான சேவைகள் பாதிக்கப்படும் விதத்தில், மோசமான வானிலை இங்கு நிலவவில்லை என்று கூறி பயணிகள் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாக இயக்கம்: அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Oman ,
× RELATED தங்கக் கடத்தல்: சென்னை விமான நிலைய அதிகாரி வீட்டில் சோதனை