×

சென்னை முழுவதும் ரூ.500 கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கறிஞர், முன்னாள் ராணுவ வீரர் அதிரடி கைது

* 90 கட்டுகள் கொண்ட ரூ.45.2 லட்சம் கள்ள நோட்டுகள், இயந்திரங்கள் பறிமுதல்
* அச்சடித்து கொடுத்த பிரஸ் உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

சென்னை: சென்னை முழுவதும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 கட்டுகள் கொண்ட ரூ.45.2 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை அச்சடித்து கொடுத்த பிரிண்டிங் பிரஸ் உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் மணி (26). இவர் தனது சகோதரன் தினேஷுடன் இணைந்து வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் மாலை நேரம் எப்போதும் அதிகளவில் கூட்டம் காணப்படும். இதனால் மணியின் உதவிக்கு வீராசாமி என்பவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக மணி நடத்தும் காய்கறி கடையில் ரூ.500 கள்ள நோட்டுகளை கொடுத்து காய்கறிகள் வாங்கி சென்றுள்ளனர். கடையில் வியாபாரம் முடிந்து, கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்தமாக வாங்க தங்களிடம் உள்ள பணத்தை கொடுக்கும் போது, வியாபாரிகள் இது கள்ளநோட்டு என கூறியுள்ளனர். எனவே, தங்களது காய்கறி கடையில் புத்தம் புது ரூபாய் நோட்டுகள் யார் கொடுத்தாலும், மணி மற்றும் தினேஷ் ஆகியோர் ஒருமுறைக்கு இரண்டு முறை சரிபார்த்து வாங்கி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், மணியின் காய்கறி கடையில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. அப்போது வயதான ஒருவர் ரூ.670க்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கிவிட்டு 2 புதிய ரூ.500 நோட்டுகளை கொடுத்துள்ளார். உடனே, கடையில் பணிபுரியும் வீராசாமி வழக்கத்தை விட இந்த ரூபாய் நோட்டுகள் சற்று வழுவழுப்பாக இருப்பதை பார்த்து, உரிமையாளர் தினேஷிடம் கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டுகளை வாங்கி சரிபார்த்த போது, அது கள்ள ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. உடனே தினேஷ் மற்றும் கடை ஊழியர் வீராசாமி ஆகியோர் கள்ள நோட்டுகளை கொடுத்த முதிவரை பிடித்து வைத்துக்கொண்டு அவரை சோதனை செய்தனர். அவரிடம் மேலும் இரண்டு ரூ.500 கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், முதியவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, பள்ளிக்கரணை பாலாஜி நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை (64) என்பதும், ராணுவத்தில் பணியாற்றிய போது ஒழுங்கீனமாக செயல்பட்டதால் அவரை 10 ஆண்டுகளில் நிரந்தர பணி நீக்கம் செய்து வெளியே அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் கள்ள ரூபாய் நோட்டுகள் குறித்து தீவிர விசாரணை நடத்திய போது, விருகம்பாக்கம் ஸ்டேட் பாங்க் காலனி 3வது தெருவை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுப்பிரமணியன் (62) கொடுத்து காய்கறிகள் வாங்கி வர சொன்னதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, போலீசார் விருகம்பாக்கம் பகுதிக்கு சென்று சுப்பிரமணியன் வீட்டில் அதிரடியாக சோதனை செய்த போது, போலீசாரே ஆச்சரியப்படும் வகையில் படுக்கை அறையில் கட்டுக்கட்டாக 90 கட்டுகள் கொண்ட ரூ.45.2 லட்சம் மதிப்புள்ள ரூ.500 நோட்டுகள் இருந்தது. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. மேலும், வீட்டின் ரகசிய அறையில் கள்ள நோட்டுகள் அச்சடிக்க வைத்திருந்த ஜெராக்ஸ் இயந்திரம், கட்டிங் மெஷின், பணம் எண்ணும் இயந்திரம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், நுங்கம்பாக்கம் போலீசார் கள்ளநோட்டுகளை மாற்றிய முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை மற்றும் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
தொடர்ந்து, இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, வழக்கறிஞர் சுப்பிரமணியன் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நண்பரான பிரிண்டிங் பிரஸ் நடத்தும் குமார் என்பவர் மூலம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடித்தது தெரியவந்தது. அந்த கள்ள நோட்டுகளை வீட்டின் ரகசிய அறையில் வைத்துக்கொண்டு, அண்ணாமலை உள்பட பலரிடம் கொடுத்து சென்னை முழுவதும் புழக்கத்தில் விட்டு, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கியதும், இதற்காக சுப்பிரமணியன் இயந்திரங்களை பிரத்யேகமாக வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

மேலும், கள்ள ரூபாய் நோட்டுகளை சென்னை முழுவதும் புழக்கத்தில் விட, பல நபர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளார். இதுதவிர வடமாநில கும்பலுடனும் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த கும்பல் கொடுத்த யோசனையின் அடிப்படையில் தான் சுப்பிரமணியன் கள்ள நோட்டுகள் அச்சடித்து கடந்த 5 மாதங்களாக சென்னை முழுவதும் புழக்கத்தில் விட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே ரூ.50 லட்சம் மதிப்புள்ள ரூ.500 கள்ள நோட்டுகளை அச்சடித்துக்கொடுத்த கே.கே.நகரை சேர்ந்த கார்த்திகேயனையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னையில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* டாஸ்மாக் கடைகளில் கள்ளநோட்டுகள் மாற்றம்
ராணுவ வீரரான அண்ணாமலையிடம் கள்ளநோட்டுகளை சுப்பிரமணியன் கொடுத்து பொருட்கள் வாங்க அனுப்பும் போது, தனியாக ரூ.1000 மதிப்புள்ள 2 ரூ.500 கள்ள நோட்டுகள் அண்ணாமலைக்கு கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு முறையும் அப்படி கொடுக்கும் கள்ள நோட்டுகளை அண்ணாமலை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து மதுபானங்கள் வாங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மூடுவதற்கு முன்பு 9.30 மணிக்கு கூட்டம் அதிகமாக காணப்படும் டாஸ்மாக் கடைகளில் கள்ள நோட்டுகளை கொடுத்து மதுபானம் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

* துணை கமிஷனர் தேஷ்முக் வேண்டுகோள்
சென்னையில் ஒரே நேரத்தில் ரூ.45.2 லட்சம் மதிப்புள்ள ரூ.500 கள்ளநோட்டுகள் பிடித்தது குறித்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறுகையில், ‘கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்ட வழக்கில் கைது ெசய்யப்பட்ட வழக்கறிஞர் சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை மீது வேறு எந்த வழக்குகளும் இல்லை. சுப்பிரமணியன் சட்டம் படித்தவர். இவர் இந்த செயலில் ஈடுபட்டது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இதன் பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

விசாரணை முடிந்த பிறகு தான் முழுமையாக விவரங்கள் தெரியவரும். சுப்பிரமணியன் மொத்தம் ரூ.50 லட்சத்திற்கு கள்ளநோட்டுகள் அடித்துள்ளார். அதில் கடந்த 5 மாதங்களில் ரூ.4.70 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்டுள்ளனர். கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய பேப்பர், அதற்கான மை எங்கு வாங்கப்பட்டது என்று விசாரணை நடத்தி வருகிறோம். அச்சடிக்கப்பட்ட பேப்பரின் தன்மை குறித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளோம். அது வந்த பிறகுதான் முழுமையான விவரங்கள் தெரியவரும்.

பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் ‘ஆர்பிஐ’ வெளியிட்டுள்ள ரூபாய் நோட்டுகள் போல் முறைப்படி இல்லை. உற்று நோக்கி பார்த்தாலே அது ஜெராக்ஸ் பேப்பர் போன்று தான் உள்ளது. எதற்காக இவ்வளவு கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது என்பது குறித்து தற்போது விசாரணையில் உள்ளது. கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்த பிரிண்டிங் பிரஸ் உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சென்னை மாநகர காவல்துறை விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், கள்ள நோட்டுகள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.இவ்வாறு துணை கமிஷனர் தெரிவித்தார்.

The post சென்னை முழுவதும் ரூ.500 கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கறிஞர், முன்னாள் ராணுவ வீரர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட...