×

லண்டனில் உள்ள பசுமை அமைப்பு சார்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு விருது: கார்பன் குறைப்பு பிரிவில் தங்கம் வென்றது

சென்னை: லண்டனில் உள்ள பசுமை அமைப்பு சார்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு, 2023ம் ஆண்டிற்கான கிரீன் ஆப்பிள் எனும் மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பசுமை அமைப்பு, உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் சிறந்த நடைமுறைகளை அங்கீகரிக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், சுதந்திரமான, அரசியல் சாரா, லாப நோக்கமற்ற அமைப்பாகும். இந்த அமைப்பு வழங்கும், கிரீன் ஆப்பிள் விருது, உலகளவில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் விருதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில், பசுமை அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில், சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கிரீன் ஆப்பிள் விருது வழங்கப்பட்டது. இதனை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் ராஜீவ் கே ஸ்ரீவஸ்தவா பெற்றுக்கொண்டார். இந்த விருது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் நேர்மறையான தாக்கத்திற்கான அர்ப்பணிப்பை குறிக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு மெட்ரோ பயணிகளுக்கும், சென்னை மக்களுக்கும் நம்பகமான, வசதியான, பாதுகாப்பான மற்றும் விரைவான பயண அனுபவத்தை வழங்கும், அதே வேளையில் சுற்றுச் சூழல் பாதிப்புகளை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் விளைவாக, இது ஆற்றல் திறன் மற்றும் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதில் பங்களிக்கிறது. அதாவது ஆற்றல் நுகர்வு, கார்பன் உமிழ்வு மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டு செலவுகளை குறைக்கிறது. இதையொட்டி, இந்த முயற்சிகள் பசுமை இல்லா வாயு உமிழ்வை குறைக்க உதவியது.

காற்றின் தரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாத்தல், சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த சுற்றுச்சூழல் ரீதியாக தோட்டங்களை உருவாக்குதல் போன்ற சுற்றுச்சூழல் முயற்சிகளிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து விருது வகைகளிலும் கடினமான கார்பன் குறைப்பு பிரிவில் இவ்விருதை வென்றதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாராட்டினார்.

இந்த விருது, அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள், தனியார் மற்றும் பொதுத்துறைகளில் உள்ள சமூகங்களை அங்கீகரிக்கும் வகையில் உலகளவில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் விருது பிரசாரமாக கருதப்படுகிறது. 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இந்த கிரீன் ஆப்பிள் விருதுகளில் கார்பன் குறைப்பு பிரிவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெண்கல விருதும், பசுமை உலக விருதுகள் 2023ல் கார்பன் குறைப்பு பிரிவில் தங்க பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் சிறந்த நடைமுறைகளை அங்கீகரிக்கவும் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் பசுமை அமைப்பால் வழங்கப்படுகின்றன.

The post லண்டனில் உள்ள பசுமை அமைப்பு சார்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு விருது: கார்பன் குறைப்பு பிரிவில் தங்கம் வென்றது appeared first on Dinakaran.

Tags : Chennai Metro Rail ,London ,Chennai ,Chennai Metro Rail Company ,Dinakaran ,
× RELATED பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம்...