×

சென்னையில் நாளை பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா; ரூ18.94 கோடி மானிய ஆணையை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பன்னாட்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் விழாவில் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் 100பேருக்கு ரூ18.94 கோடி மானிய ஆணையை முதல்வர் வழங்குகிறார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சென்னை வர்த்தக மையத்தில் நாளை பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆற்றிடும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 27 ஆம் நாள் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளினை அரசு விழாவாகக் கொண்டாடிட வேண்டும் என ஆணையிட்டதைத் தொடர்ந்து, நாளை 27.06.2023 காலை 10.30 மணி அளவில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில், முதலமைச்சர், சமத்துவபுரம் தந்து சமூக நீதி காத்திட்ட சமூக நீதி காவலர் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலைநாட்டிடும் விதமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் திட்டமான “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்” கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்கள்.

மேலும் இவ்விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம், கொடூர், திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று தொழிற்பேட்டைகள். குறுந்தொழில் குழும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா காடம்புலியூரில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பினை உருவாக்கிடும் நோக்கோடு மெய் நிகர் கண்காட்சியகம் ஆகியவற்றை முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்.

மேலும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் பதிப்பின் கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ அணிகளின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 10 லட்சம் வழங்குகிறார். இது மட்டுமல்லாமல், சமச்சீர் வளர்ச்சியை முன்னெடுக்கும் விதமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கிய ரூ.1510 கோடி மதிப்பில் 7,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பிற்கான ஃபேம் டிஎன் (FaMe TN) மற்றும் சிட்பி (SIDBI) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளன.

விழாவில், தொழில்துறையின் வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் மாநில அளவில் சிறந்த தொழில்முனைவோர் விருது, மாநில அளவில் சிறந்த வேளாண்சார் தொழில் நிறுவனத்திற்கான விருது, மாநில அளவில் சிறந்த மகளிர் தொழில்முனைவோர் விருது, மாநில அளவில் தரம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கான விருது, சிறப்புப்பிரிவைச் சேர்ந்த சிறந்த நிறுவனத்திற்கான விருது ஆகிய விருதுகளும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதிவசதியினை சிறப்பாக வழங்கிய மூன்று வங்கிகளுக்கான விருதுகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.

இந்த விழாவில் முதலமைச்சரால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் ரூ.1723.05 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு, சுமார் 30,000 நபர்களுக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும் என கூறபட்டுள்ளது.

The post சென்னையில் நாளை பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா; ரூ18.94 கோடி மானிய ஆணையை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : International Micro, Small and Medium Enterprises Day ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Chennai Nandambakkam ,M.K.Stalin ,
× RELATED அரசின் நலத்திட்டங்கள் குறித்து...