×

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் ரூபெல்லா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் ரூபெல்லா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலை, பீமனம்பேட்டை உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த தடுப்பூசி செலுத்தும் நிகழ்வினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 9 மாதம் முதல் 15 வயது வரையிலான இளம் சிறார்களுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் 30ம் தேதி வரை 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் இந்த தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசிகள் செலுத்தப்படும். பள்ளிகளை பொறுத்தவரை நடமாடும் மருத்துவ குழு வாகனங்களின் மூலம் தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெறுகிறது. 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 15 வயது வரையிலான இளம் சிறார்களின் எண்ணிக்கை 27.42 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருந்தாலும், கூடுதல் தவணை தடுப்பூசியாக இது செலுத்திகொள்ள வேண்டும். இந்த தடுப்பூசிகளை பொறுத்தவரை விரையம் உட்பட 36 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. ஒன்றிய அரசிடம் இருந்து 10 லட்சம் தடுப்பூசிகள் கோரப்பட்டுள்ளது, விரைவில் அவை தமிழ்நாடு மாநிலத்திற்கு வரும். தற்போது 2.90 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம) சங்கர்லால் குமாவத், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் ரூபெல்லா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,M. Subramanian ,
× RELATED பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை...