×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு: தமிழ்நாட்டிற்கானதாக மாநிலங்களவையில் எனது குரல் இருக்கும் என்று பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 6 இடங்களில் 4 இடங்கள் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 2ம் தேதி தொடங்குகிறது. திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நேரில் சந்தித்து கமல்ஹாசன் நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணை தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அளித்த பேட்டி: முதல்வர் அழைத்ததன் பெயரில் சந்தித்தேன். ராஜ்யசபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எங்கள் கட்சியிடம் சொல்லியிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளையும், தேவையான தஸ்தாவேஜூகளையும் தயார் செய்து வைக்க வேண்டும் என்பதற்கான அறிவுரையையும் வழங்கினார்.

முன் அனுபவம் உள்ளவர்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய அறிவுரைகளையும் சொன்னார்கள். கேட்டுக்கொண்டோம். எப்போது வேட்புமனு தாக்கல் செய்வது என்பதை அவர்கள் சொல்வார்கள். அதற்கான முன் ஏற்பாடுகளுக்காக தான் இங்கே வந்தோம். மாநிலங்களவையில் எனது குரல் தமிழ்நாட்டிற்கானதாக இருக்கும். நான் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு குரல் கொடுத்து வருகிறேன். எந்த மொழி குறித்தும் நான் தவறாக பேசவில்லை. அப்படி பேசி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டு இருப்பேன்.

சிலர் அரசியல் காரணத்திற்காக என்மீது வன்மத்தை கொட்டுகிறார்கள். அவர்களிடம் மன்னிப்பும் கேட்க மாட்டேன், பதிலும் சொல்ல மாட்டேன். அனைத்து மாநில மக்கள் மீதும் என் அன்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். இது ஜனநாயக நாடு. சட்டத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். மக்கள் நீதி மய்யமும், நானும் திமுகவுடன் இருக்க வேண்டியது நாட்டிற்கு தேவை, அதனால் தான் திமுகவுடன் பயணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு: தமிழ்நாட்டிற்கானதாக மாநிலங்களவையில் எனது குரல் இருக்கும் என்று பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Chief Minister ,MK Stalin ,Anna ,Arivalayam ,Chennai ,Tamil Nadu ,Rajya Sabha ,DMK ,
× RELATED திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான...