×

சென்னையில் இன்றும், நாளையும் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு மலர் வெளியிடுகிறார்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்றும், நாளையும் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு மலரை வெளியிடுகிறார். கவித்துவமும் இலக்கியத் திறனும் கொண்ட கலைஞர் படைப்பாற்றலை போற்றும் வண்ணம் சாகித்ய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் – சிறப்புநிலை தமிழ்த்துறை இணைந்து முதன்முறையாக ‘முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம்’ இன்றும் நாளையும் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடக்கிறது. தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்துகிறார்.

தொடக்க விழாவில், சாகித்ய அகாடமி செயலர் ஸ்ரீனிவாசராவ் வரவேற்புரையும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் மற்றும் கவிஞர் வைரமுத்து சிறப்புரையும் ஆற்றுகின்றனர். தொடர்ந்து, கலைவாணர் அரங்கம் மூன்றாம் தளத்தில் உள்ள சிற்றரங்கில் ‘கவிதை’ என்கிற அமர்வு 1-ல் ‘தனித்து ஒளிரும் நட்சத்திரம்’ என்ற தலைப்பில் கவிஞர் இமையமும், ‘கவிதையியல் நோக்கில் கலைஞரின் கவிதைகள்’ என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், ‘கலைஞரின் கவிதைகள்: அரசியலும் அழகியலும்’ என்ற தலைப்பில் முபீன் சாதிகாவும், ‘புனைகதை’ என்கிற அமர்வு 2ல் கருத்தாடலியல் நோக்கில் ‘பொன்னர் சங்கர் புதினம்’ என்ற தலைப்பில் நடராசப்பிள்ளையும், ‘கலைஞரின் சிறுகதைகளில் சமூகச் சமத்துவம்’ என்ற தலைப்பில் பாரதிபாலனும்,‘ரோமாபுரிப் பாண்டியன்வழி வணிக உறவை எழுதுதல்’ என்ற தலைப்பில் மு.ரமேஷ், ‘செவ்வியல்’ என்கிற அமர்வு 3ல் ‘கலைஞர் திருக்குறளுரையின் சிறப்பியல்பும் நடைமுறைப்பாங்கும்’ என்ற தலைப்பில் மறைமலை இலக்குவனார், ‘சிலப்பதிகாரம்: கலைஞரின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ‘தொல்காப்பியப் பூங்கா: ஒரு கதை கூறல் உரை’ என்ற தலைப்பில் செயராமன், ‘கலைஞரின் சங்கத் தமிழ்: கவிதைக் கட்டமைப்பு’ என்ற தலைப்பில் மோகன்ராஜ் ஆகியோர் கட்டுரை வாசிக்கின்றனர்.

இதேபோன்று நாளை ‘நாடகம்’ என்கிற அமர்வு 4ல் ‘கலைஞரின் நாடகங்கள் சித்தரிக்கும் திராவிட இயக்கக் கருத்தியல்’ என்ற தலைப்பில் முருகேசபாண்டியன், ‘பாமரர்க்கும் தமிழின் ருசியைக் கடத்திய மு.க.வின் நாடகங்கள்’ என்ற தலைப்பில் ரவிசுப்பிரமணியன், ‘எதிர் அடையாள அரசியலை நிகழ்த்தும் கலைஞரின் நாடகங்கள்’ என்ற தலைப்பில் ராம்ராஜ், ‘திரைவசனம்’ என்கிற அமர்வு 5ல் ‘கலைஞரின் திரைமொழி: ராஜா ராணியில் இலக்கிய மாட்சி’ என்ற தலைப்பில் சுப்பிரமணி, ‘கலைஞரின் நாடக – திரைமொழி’ என்ற தலைப்பில் சந்திரசேகரன், ‘உரைநடை’ என்கிற அமர்வு 6ல் ‘கவிதைப் பண்புகளால் கட்டமைந்த கலைஞர் கடிதங்கள்’ என்ற தலைப்பில் ராமமூர்த்தி, ‘அரசியல் வரலாறான தன்வரலாறு’ என்ற தலைப்பில் அதியமான், ‘இளைஞரும் கலைஞரும்’ என்ற தலைப்பில் சங்கர சரவணன் கட்டுரை வாசிக்க உள்ளனர். நிறைவு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையுரையும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராசேந்திரன் நிறைவுரையும், சாகித்ய அகாடமியின் தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் நன்றியுரையும் ஆற்றுகின்றனர்.

The post சென்னையில் இன்றும், நாளையும் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு மலர் வெளியிடுகிறார் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Seminar ,Chennai ,Chief Minister ,MK Stalin ,Kalaivanar Arangam ,Sahitya Academy ,Jawaharlal Nehru University… ,Today and ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!