×
Saravana Stores

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: கனமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை அக்டோபர் 21ல் தொடங்கியதில் இருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஆவடியில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதுதவிர சென்னையில் பல இடங்களிலும் 10 செ.மீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் தேங்கிய தண்ணீரை, மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளவும், தண்ணீரை அகற்றும் பணியை மேற்பார்வையிடவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11.30 மணிக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் அமைந்துள்ள, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் களப்பணி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, மழைநீர் வெள்ள பாதிப்பு தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், ரிப்பன் மாளிகையில் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை முதல்வர் சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மீட்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும் என்றும், மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் உடனடியாக மக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி மின்விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிவுடம், புதிதாக புயல் உருவாகவுள்ளதையொட்டி கனமழையால் அடுத்து வரும் சில நாட்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும், கடந்த இரு தினங்களில் மழைநீர் தேங்கிய இடங்களை கண்காணித்து, மீண்டும் அப்பகுதியில் மழைநீர் தேங்காவண்ணம் உயர்சக்தி மின் மோட்டார்களை வைத்து நீரினை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு பகுதி மக்களிடம் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தினார். அவர்களுக்கு தேவையான உணவு, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்திடவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்பி ஆ.ராசா, துணை மேயர் மகேஷ் குமார், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் எஸ்.ஏ.ராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை விவரம்
தமிழகத்தில் வருகிற 4ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விவரம்:

* 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்குவது, பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் இதர நிவாரண மையங்களை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
* மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு முப்படையினரும் தயார் நிலையில் வைத்திட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
* கண்காணிப்பு பணிகளுக்கென மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சி பணி அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளை மேற்பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர்.
* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.
* மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்கும்.
* புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* சென்னை மாநகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு கமாண்டோ படையினை சார்ந்த 50 வீரர்கள் கொண்ட 2 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினை சார்ந்த 25 வீரர்கள் கொண்ட ஒரு குழுவும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
* சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 296 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

The post சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Chennai Corporation ,
× RELATED எதை பற்றியும் கவலைப்படாமல்...