×

சென்னை சென்று திரும்பியபோது காவேரிப்பாக்கம் அருகே டயர் வெடித்து மினி வேன் கவிழ்ந்ததில் 11 பேர் படுகாயம்

*திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள்

காவேரிப்பாக்கம் : சென்னையில் உறவினர் வீட்டு கிரகபிரவேசம் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது, காவேரிப்பாக்கம் அருகே டயர் வெடித்ததில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பட்டு கிராமம் பஜனை கோயில் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (33), சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய தங்கை மோஷிகா சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீடு கிரகப்பிரவேசம் செய்ய நேற்று அதிகாலை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் குமரேசன் தனது உறவினர்களுடன் மினி வேனில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் நடைபெறும் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை சுப நிகழ்ச்சி முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேனை ஆரணி அடுத்த தேவிகாபுரம் பகுதியைச் சேர்ந்த பாபு(34) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரைப்பெரும்பாக்கம் கூட்ரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, வேனின் பின்பக்க டயர் ஒன்று திடீரென வெடித்தது. இதில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வேனில் சிக்கி கொண்டவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வாலாஜா பகுதியில் இருந்து கிரேன் வரவழைத்து விபத்துக்குள்ளாகிய வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீரமைப்பு செய்துள்ளனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வேனில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பட்டு கிராமம் பஜனை கோயில் பகுதியைச் சேர்ந்த மணி(67), சங்கர்லிங்கம்(52), மங்கையர்க்கரசி(50), ரமேஷ்(46), ராதிகா(34), சாய்ரிஷ்(7), ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ரோகித்(2), மாளவிகா(21), ஹரிகேஷ்(3), சங்கீதா(28), நதியா(38), ஆகிய 5 பேர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை சென்று திரும்பியபோது காவேரிப்பாக்கம் அருகே டயர் வெடித்து மினி வேன் கவிழ்ந்ததில் 11 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kaveripakkam ,Chennai ,Thiruvannamalai Kaveripakkam ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...