×

நடப்பு மாதத்தில் 2வது முறை மாற்றம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.57.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,942 ஆக நிர்ணயம்

சேலம்: காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக காஸ் சிலிண்டர் விலையை, தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. இந்நிலையில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு ரூ.200 குறைத்தது. இதனால், டெல்லியில் ரூ.903, மும்பையில் ரூ.902.50, கொல்கத்தாவில் ரூ.929, சென்னையில் ரூ.918.50 ஆக குறைந்தது.

தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர், நவம்பர் (நடப்பு மாதம்) மாத தொடக்கத்தில் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் நிலையாக வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் கடந்த 1ம் தேதி ரூ.101.50 அதிகரித்தனர். இதனால், சென்னையில் அக்டோபர் மாதம் ரூ.1,898க்கு விற்கப்பட்ட வர்த்தக காஸ் சிலிண்டர், ரூ.101.50 அதிகரிக்கப்பட்டு ரூ.1,999.50ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு மாதத்தில் 2வது முறையாக நேற்று அதிகாலை வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

இதன்படி, நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.57.50 குறைந்தது. இதனால் சென்னையில் ரூ.1,999.50ல் இருந்து ரூ.1,942 ஆகவும், சேலத்தில் ரூ.1,948.50ல் இருந்து ரூ.1,891 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதுவே டெல்லியில் ரூ.1,775.50 ஆகவும், மும்பையில் ரூ.1,728 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,885.50 ஆகவும் ரூ.57.50 குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* தேர்தல் அச்சமா?
மத்தியபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் இறுதி கட்டத்தில் உள்ளது. இன்றைய தினம் ம.பி., சட்டீஸ்கரில் அதிகப்படியான தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அம்மாநிலங்களில் விலைவாசி மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் கடுமையான எதிர்ப்பை ஒன்றிய பாஜ அரசுக்கு தெரிவித்துள்ளனர். இதனால், திடீரென வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை குறைத்து பாஜ அரசு நாடகமாடுகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

The post நடப்பு மாதத்தில் 2வது முறை மாற்றம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.57.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,942 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Salem ,Dinakaran ,
× RELATED விஷம் குடித்த கணவர் சாவு மருத்துவமனையில் மனைவி தற்கொலை